சூடுபிடிக்கிறது தமிழக தேர்தல் களம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி இன்று வேட்புமனு தாக்கல்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களும் மனு தாக்கல் செய்கின்றனர்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். அதே போல் உதயநிதி ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல், சீமானும் மனு தாக்கல் செய்கிறார்கள். மேலும் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும் மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தத்தில் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதிமுக 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதேபோல் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியிலும், அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. வேட்புமனு தாக்கலின் 2வது நாளான இன்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி.மோகன்ராஜ்ஜிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதே போல் திமுக உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் 1 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதேபோல அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் இன்று பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று காலை 1.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். திருவொற்றியூர் ெதாகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதே போல மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அனைத்து கட்சியினரும் இன்று வேட்புமனு மனு தாக்கல் செய்வதால் தேர்தல் களம் இன்னும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. வருகிற 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

Related Stories: