அதிமுக தலைமையகத்தில் விடிய விடிய ஆலோசனை: பாஜக, பாமகவுக்கான தொகுதிகள் விரைவில் அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தப்பட்டதில் அவை போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்த தொகுதிலே ஒதுக்க அதிமுக முன்வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக நேற்று அறிவித்தது.

இதனையடுத்து இரவு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அளித்து இறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பாமக சார்ப்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, அதிமுக தலைமை அலுவலகம் வந்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி தெரிவித்தார்.

தொடர்ந்து விடிய விடிய ஆலோசனை நடத்திய அதிமுக நிர்வாகிகள் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர் பட்டியலையும் இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளதால் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளான தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: