சுயமரியாதை உள்ளது ரஜினி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுயமரியாதை உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நேபாளத்தில் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேர் உடல்கள், டெல்லி வந்து சேர்ந்ததும் சென்னை அல்லது கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு டெல்லியில் சிகிச்சை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஜினி மீது அவதூறு பரப்பி உள்ளனர். அதை யாரும் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. ரஜினி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சுயமரியாதை உள்ளது. தனது சுயமரியாதை பாதிக்கப்படும்போது, ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்துவது முறையானது தான். பாதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில், தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக, அவர் பின்னால் நிற்கிறோம். எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் காலதாமதம் எதுவும் கிடையாது. எங்கள் கூட்டணி தான், பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. கூட்டணியில் நடப்பதை தினமும் மீடியாவுக்கு கொடுக்க முடியாது. உள்ளே நடக்க வேண்டிய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எங்களுடைய தேசிய தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: