பெண்களின் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சியில் முன்னுரிமை கொடுக்கும் அரசு: குறை சொல்ல முடியாததால் வாயில் அவலை போட்டு மெல்லும் எதிர்க்கட்சிகள்: – சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்

 

* சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் ஆட்சியில், அது உங்களது சமூக நலத்துறையில் எப்படி எதிரொலித்து வருகிறது?

சமூக நலத்துறை என்பது பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், திருநங்கையர், முதியோர்கள் என விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கான பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும் துறையாக உள்ளது. இந்தத் துறையின் கீழ் அனைவரையும், முதலமைச்சருடைய அறிவுரைப்படி சமமாக பாவித்து, அனைவருக்குமான நலன் மற்றும் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி வருகிறோம். முதலமைச்சர் உத்தரவுப்படி அனைவருக்கும் அந்தத் திட்டத்தினுடைய பலன் கிடைக்கும் வண்ணம் இத்துறை செயல்பட்டு வருகிறது.

* சமூக நலத்துறைக்கு அமைச்சராக இருக்கும் நீங்கள், உங்கள் துறையின் கீழ் இருக்கக்கூடிய பெண்களுக்கான முன்னேற்றம் எந்த அளவில் உள்ளது என சொல்கிறீர்கள்?

பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத பேறுகால விடுப்பு அறிவித்தோம், அதை அமல்படுத்தி வருகிறோம். சமையலர், உதவியாளர் என அனைவருக்கும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தினோம். ​அங்கன்வாடியிலும் 25% கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்குத்தான் பணி நியமன முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்தோம். அங்கன்வாடி பணியாளர்களுக்குக் கோடை விடுமுறை கொடுத்தோம்.

பணிபுரியும் மகளிருக்கான ‘POSH Act’ என்ற பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று, 10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் 55,000 நிறுவனங்களில், ‘உள்ளகக் குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளது. அது முறையாகச் செயல்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது. இவ்வாறு பெண்களுக்கான சட்டங்கள், அது போக்சோ சட்டமாக இருக்கட்டும், எல்லாச் சட்டத்தையும் நாம் முறையாகச் செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் முன்னேறி வருகிறார்கள். விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள். தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார்கள்.

* திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதற்கு, உங்கள் பதில் என்ன?

முதலமைச்சர் பொறுப்பேற்று, இந்தத் துறைக்கான முதல் ஆய்வுக் கூட்டம் நடத்தும்போதே எங்களுக்குப் போட்ட உத்தரவானது ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுத்திட வேண்டும். அந்த குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும், அதற்கேற்பச் செயல்பட வேண்டும்’ என்று சமூக நலத்துறை மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார். அதன்படிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

முதற்கட்டமாக நாங்கள் எடுத்த பணி ‘விழிப்புணர்வு’. நிறைய பேருக்கு போக்சோ சட்டம் பற்றித் தெரியவில்லை. போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் தைரியமாகப் புகாரளிக்க முன்வருகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அநீதிகளுக்குக்கூட இப்போது புகார்கள் வருகின்றன. அரசு எதையும் மறைக்காமல், உடனடியாக சிஎஸ்ஆர் மற்றும் எப்ஐஆர் பதிவு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த குறையும் சொல்ல முடியவில்லை என்பதால் வெறும் வாயில் மெல்வதற்கு அவல் கிடைத்தது போல் இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் பிரசாரமாக கையில் எடுத்துள்ளனர் என்பதுதான் உண்மை. மக்கள் விழிப்புணர்வு பெற்றதால் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

* இளைஞர்கள் பேராதரவோடு களமிறங்கும் விஜய்க்கு பெண்களின் ஆதரவும் பெருகியுள்ளதாகக் கூறப்படுகிறதே?

ஆரம்பத்தில் அவருக்கு இருந்த பெண்கள் மற்றும் ரசிகைகளின் ஆதரவு தற்போது குறைந்து வருகிறது. ஆனால் அவர் தன் மனைவி, குழந்தைகளுக்கு அநீதி விளைத்த அவரது செயல்பாடுகளால் அவர் மீதான நம்பிக்கையை பெண்கள் இழந்து வருகின்றனர். கட்சியின் பெண் நிர்வாகிகளே வெளியேறி வருவது இதற்குச் சான்று. பெண்களுடைய ஆதரவு குறைந்து வருகிறது. பெண்களே நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

Related Stories: