மதுரையில் நேற்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தி எழுத்துகளை அழித்து வருவதாக கூறுகிறீர்கள். இந்தி எழுத்து போர்டில் இருந்தால் இருந்து விட்டு போகட்டுமே? எல்லா இடத்திலும் தமிழ் இருக்கணும். சரிதான். மொழி தெரியாமல் எவ்வளவு பேர் வடமாநிலங்களில் இருந்து வந்து, இங்கே தமிழ் படிக்கிறார்கள். இந்தியை அழிப்பதால் லாபம் ஒன்றும் இல்லை.
தவெக கூட்டணியில் வருமா? வராதா? என்பதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் டெல்லிக்கு எல்லாம் போகவில்லை. அதைப்பற்றி எந்த கருத்தும் எனக்குத்தெரியாது. ஆனால் நீங்கள் தவெக எனச் சொன்னதால், அந்த கட்சியின் ஆதவ் அர்ஜூனா, திரையின் முடிசூடா மன்னரான, சிறந்த ஆன்மிகவாதியான ரஜினிகாந்தை விமர்சிப்பது வருந்தத்தக்கது.
தவெக கட்சித்தலைவர் விஜய், ஏன் இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவை கண்டிக்கவில்லை? இதுதான் எங்கள் கேள்வி. ரஜினிகாந்த் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். விமர்சித்து நான்கு நாட்களாக மவுனமாகவெல்லாம் இருக்கவில்லை. உடனே பாஜ சார்பில் அறிக்கை விட்டோம். முதலில் குரல் கொடுத்தது பாஜதான். வருத்தம் தெரிவிப்பார் என பார்த்தோம். இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.
என்டிஏ கூட்டணி தொகுதிப்பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை. 30ம் தேதி வரை நாமினேசன் போடலாம். 15 நாட்கள் வரை இருக்ககிறது. எந்த சிக்கலும் இல்லை. எங்களுக்குள் ஒருமித்த கருத்தும், சுமுக நிலையே இருக்கிறது. கூட்டணிக்குள் புதிய கட்சி வருமா என கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பார்ப்போம். கரூர் விகாரத்தில் சிபிஐ விசாரணை விவகாரம் குறித்து நான் பதில் கூற முடியாது.
தேர்தலில் பண பலமா? மக்களின் மன பலமா என்றால் மக்கள் பணத்திற்கு அப்பாற்பட்டவர்கள். பணபலம் ஜெயிக்காது. மக்களின் மன பலம்தான் ஜெயிக்கும். விஜய் துணை முதலமைச்சரா? என்கிறீர்கள். கூட்டணியே இல்லை. பேச்சுவார்த்தையும் இல்லை. டெல்லிக்கு அழைத்து மிரட்டுவதாக கூறுகிறீர்கள்? விஜய் டெல்லிக்கு போய்விட்டு சென்னையே வந்துவிட்டார். இதற்கெல்லாம் ஆதாரமில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
* கத்துக் குட்டிலாம் பேசலாமா? வானதி அட்டாக்
திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ரஜினிகாந்த்தின் குரல் மற்றும் அவரது எண்ணத்திற்கு எப்போதும் தமிழகத்தில் ஒரு மதிப்புள்ளது.
அதனால் அவரை குறைவாக மதிப்பிடுவதும், அவருடைய அரசியல் ரீதியான பங்களிப்பை பற்றி தவறாக பேசுவது அதுவும் கத்துக்குட்டி நபர் (ஆதவ் அர்ஜுனா) பேசுவதும் ஏற்புடையதல்ல’’ என்றார். சிலிண்டர்கள் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, ‘‘இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை, வணிக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு இருக்கிறதே தவிர தட்டுப்பாடு இல்லை’’ என்றார்.
* ஆதவ் பேசுவது ஏற்புடையதல்ல: வாசன் பாய்ச்சல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் மிக சுமுகமாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் தேதி தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வார கால அவகாசம் உள்ளது. விரைவில் அதிமுக-பாஜ தலைமை அதிகாரப்பூர்வ தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிப்பை வெளியிடும். ரஜினிகாந்த் மூத்த அரசியல் கலைஞர். மிகுந்த மரியாதைக்குரியவர்.
அவரது கலைச்சேவையின் அடிப்படையில் இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலகளவில் பெருமை சேர்த்தவர். நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர். உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அனைத்து துறையை சார்ந்தவர்களிடமும் நன்மதிப்பை பெற்றவர். அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல. மக்கள் அதனை நிராகரிப்பார்கள்.
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கள் கண்டனத்துக்குரியது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் களத்தில் தமாகா தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். தேர்தல் ஆணையத்திடம் சில பதில்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு கூறினார்.
தே.ஜ. கூட்டணியில் தவெக வருமா என்ற கேள்விக்கு, அதிமுக தலைமையிலான முதல் அணி தே.ஜ. கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இது தான் எங்களது நிலை என்றார். தவெக வருமா? என மீண்டும் கேட்டதற்கு, எங்களது நிலையை மட்டும் தான் தெரிவிப்போம், என பதிலளித்து, அங்கிருந்து புறப்பட்டார்.
