மகளிர் அமைப்புகள் மாதர் சங்கங்கள் கடும் கண்டனம்: பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் எனக்கு நயன்தாரா தான் வேணும்; தன் கனவை சொன்ன சி.வி.சண்முகம்

 

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி பேசுகையில், ‘அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று கூறினார்.

ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடிமேலே சென்று உங்க கனவை சொல்லுங்க அதை நிறைவேற்றுவதாக கூறுகிறார். ஆமாம் எனக்கு நயன்தாரா வேண்டும் அதை நிறைவேற்றுவாரா?. இவர் என் கனவை நிறைவேற்றுவாரா?. இவன் கேப்பான் எனக்கு நயன்தாராவை கல்யாணம் பன்னிவைங்க என்று இவரு நிறைவேற்றுவாரா? என்றார். சி.வி.சண்முகத்தின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஆர்ப்பாட்டத்தக்கு வந்திருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, பெண்களும் முகம் சுளித்தபடி சென்றனர்.

சி.வி.சண்முகம் எம்பி தமிழக அரசு திட்டங்கள் குறித்தும், மகளிர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். விழுப்புரத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த அதிமுக பூத் கமிட்டி மீட்டிங்கில், தமிழக அரசு இலவச திட்டங்களை வரிசையாக அடுக்கி பேசிய சி.வி சண்முகம், ஆளுக்கொரு பொண்டாட்டியையும் கொடுப்பார்கள் என்ற மகளிர்களையும், அரசு திட்டங்களையும் கொச்சைப்படுத்தி பேசியிருந்தார்.

அப்போது, மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தை நாடி இந்த பிரச்னையிலிருந்து மீண்டு வந்தார். பிறகும் தனது பேச்சை மாற்றிக் கொள்ளாத சி.வி சண்முகம், கடந்த மாதம் விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில், ‘கோடை வெயிலால் மக்கள் கருப்பாகி விட்டார்கள்.

இதனால் அரசு வழங்கிய கோடை கால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரத்தை வைத்து பெண்கள் தங்களது கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார், சக்காளத்தி, ஓரவத்தி, வீட்டுக்காரருக்கு தனியாக குடும்பம் இருந்தால் அதையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானல், ஊட்டிக்கு சென்று பத்து நாட்கள் தங்கி குளுகுளுவென இருக்க முடியுமா. இந்த முக்கூட்டுக்குகூட போயிட்டு வரமுடியாது’ என்றார். இப்படி அரசு திட்டங்களையும், மகளிர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசி வரும் சி.வி.சண்முகத்துக்கு மகளிர் அமைப்புகள், மாதர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளன. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

* ஒரு புளோவுல வந்துருச்சு… ஸாரி…

நயன்தாரா பற்றி சி.வி. சண்முகம் எம்பி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே அடுத்த சில மணிநேரங்களில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சி.வி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது ஒரு புளோவில் தவறுதலாக வந்துவிட்டது. தவறுதலாக நயன்தாராவின் பெயரை உச்சரித்துவிட்டேன். எந்தவிதமான உள்நோக்கத்துடனும் இதனை கூறவில்லை. இந்த தவறுக்கு மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: