குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக-பாஜ கூட்டணி சார்பில் அண்ணா ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, மாவட்ட கலெக்டர் அழகுமீனாவை மிரட்டும் வகையில் பேசினார். நாங்க சொல்கிறபடி நடக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி தூக்கி விடுவோம். இதே இடத்துல உங்களை கண்டிச்சு ஆர்ப்பாட்டம் போடுவோம் என்றார்.
அவருக்கு அடுத்தபடியாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.,வும் கலெக்டரை மிரட்டும் வகையில் பேசினார். நாகர்கோவில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களை பாராட்டி விட்டு சென்று இருக்கிறார் என கூறிய தளவாய்சுந்தரம், நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சொல்லிட்டோம். உங்களை (கலெக்டரை) மாற்ற எங்களால் முடியும். நாங்க சொன்னால் தேர்தல் ஆணையம் கேட்கும் என்ற ரீதியில் பேசினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அழகுமீனாவை மிரட்டும் வகையில் இவர்கள் பேசி இருப்பது அரசு அதிகாரிகள், ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எப்படி தான் அதிகாரிகள் வேலை பார்க்க முடியும் என கொந்தளித்துள்ளனர்.
ேதர்தல் நேரத்துல ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. முதல் நாள் மாலை தான் மனு கொடுத்து இருக்காங்க. தேர்தல் ஆணைய அதிகாரிகள் கிட்ட கலந்தாலோசனை செய்து தான், கலெக்டர் அனுமதி கொடுத்துள்ளார். அதற்குள் அனுமதி தாமதம் ஆகி விட்டது என கூறி, கலெக்டரை மிரட்டும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் பேசி இருப்பது ஏன்? என்றும் அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது ஒரு பெண் அதிகாரியை பார்த்து பாவம் செய்யாதீங்க. வெயிட்டேஜ் கூடி விடும் என்றெல்லாம் பேசியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என பெண் அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
* அதிமுக வேட்பாளரை அறிவித்த பாஜ
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பெயரை குறிப்பிட்டு கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் தளவாய்சுந்தரம் தான் போட்டியிடுகிறார். இன்னும் 45 நாளில் அவர் அமைச்சர் என்று மேடையில் முழங்கினார். இதை கேட்டதும் தளவாய்சுந்தரம் எழுந்து ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். ெபான்.ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சை, அங்கு மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலரே ரசிக்கவில்லை.
கன்னியாகுமரி தொகுதிக்கு வேட்பாளரை சொல்லிய பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கலாமே. தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. அதற்குள் ஏன் வேட்பாளர், அமைச்சர் வரைக்கும் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறார். ஜெயலலிதா இருந்து இப்படி பேசி இருந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள் என ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களே கூறினர்.
* எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ புறக்கணிப்பு
நாகர்கோவிலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி வர வில்லை. ஆர்ப்பாட்டம் தொடர்பான விளம்பரங்களிலும், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பெயர் இடம் பெறவில்லை. ெதாகுதி எம்.எல்.ஏ. பெயரே மிஸ்சானதால் தான் அப்செட் மூடில், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறினர். திட்டமிட்டே அவரது பெயரை புறக்கணித்துள்ளனர் என தெரிவித்தனர்.
