தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடங்காத நிலையில், சேலம் மாவட்டத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை விட்டுவிட கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அன்புமணி பாமகவுக்கு 1 தொகுதி ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். மீதுள்ள 10 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். ஏற்காடு தொகுதியில் உஷாராணி என்பவரையும், வீரபாண்டி தொகுதியில் மாஜி எம்எல்ஏ மனோன்மணியையும் வேட்பாளர்களாக களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்.
10 தொகுதியையும் மீண்டும் அதிமுக தக்க வைத்து கொள்ளும் வகையில் பசையை இறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இம்முறை ஓட்டுக்கு 500 ரூபாய் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மடங்கு அதிகமாகி ரூ.1000 வரை பாயும் என அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் பரவியுள்ளது. தற்போதே தொகுதி, பகுதி, வட்டம் வாரியாக பணம் இறங்கிவிட்டது. இதன்படி பார்த்தால் ஓட்டுக்கு மட்டும் ரூ.275 கோடியை அதிமுக அந்தந்த பகுதிக்கு கொண்டு சேர்த்து விட்டது.
அதே நேரத்தில் பணம் சப்ளை செய்யும் பொறுப்புகளை எங்களிடமே ஒதுக்க வேண்டும் என குடுமிப்பிடி சண்டையும் அதிமுகவினரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுக்கப்படும். இதற்கான பணம் தற்போதே வந்துவிட்டது. வேட்பாளர்களும் அவர்களின் பங்கான ரூ.10கோடியை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டனர்’ என்றார்.
