கேரளா 20-20 கட்சியில் 3 நடிகைகள் போட்டி

கேரளாவில் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ம் தேதியே இடதுசாரி கூட்டணி கட்சியில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை தங்களது பெரும்பாலான வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்த இரு கட்சியிலும் முதல்வர் பினராயி விஜயன் உள்பட 14 அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்தக் கூட்டணியில் உள்ள கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. பாஜ தங்களது 47 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்நிலையில் பாஜ கூட்டணியில் உள்ள டுவென்டி டுவென்டி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்கட்சி சார்பில் வீணா நாயர், அஞ்சலி நாயர் மற்றும் லட்சுமி பிரியா ஆகிய 3 மலையாள நடிகைகள் போட்டியிடுகின்றனர். நடிகை வீணா நாயர் ஏற்றுமானூர் தொகுதியிலும், அஞ்சலி நாயர் திருப்பூணித்துறாவிலும், லட்சுமி பிரியா பெரும்பாவூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகை வீணா நாயர் கூறியதாவது: பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் இருந்துள்ளேன். சினிமாவுக்கு வந்த பின்னர் நான் அதிலிருந்து ஒதுங்கி விட்டேன். எனக்கு சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் உண்டு. டுவென்டி டுவென்டி கட்சியின் மூலம் எனக்கு நம்முடைய சமூகத்திற்காக கூடுதலாக சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* 55 பேர் அடங்கிய காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: பாலக்காட்டில் காமெடி நடிகர் ரமேஷ் பிஷாரடி போட்டி; உம்மன் சாண்டி மகனுக்கு மீண்டும் வாய்ப்பு
கேரளாவில் நேற்று 55 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கடந்த முறை வெற்றி பெற்ற அதே பரவூர் தொகுதியிலும், முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ரமேஷ் சென்னித்தலா கடந்த முறை வெற்றி பெற்ற ஹரிப்பாடு தொகுதியிலும், மாநிலத் தலைவர் சன்னி ஜோசப் பேராவூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பாலக்காடு தொகுதியில் பிரபல மலையாள காமெடி நடிகரும், டைரக்டருமான ரமேஷ் பிஷாரடி போட்டியிடுகிறார். கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் மாங்கூட்டத்தில் பலாத்கார வழக்கில் சிக்கியதால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த முறை வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்கள் தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் கே.முரளீதரன் வட்டியூர்க்காவு தொகுதியிலும், உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் கடந்த முறை வெற்றி பெற்ற அதே புதுப்பள்ளி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

* புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று முடிவு
புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. 23ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்னும் 6 நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு முடித்து, வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ஒவ்வொரு கட்சிகளும் உள்ளன. புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்வது தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. கடந்த தேர்தலைவிட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட திமுக விருப்பம் தெரிவித்துவரும் நிலையில் யார், யார் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பதை உறுதி செய்ய புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக மாநில ெபாறுப்பாளரான ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை மீண்டும் நடந்தது. இரு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், தங்களது விருப்பத்தை முன்வைத்தன. எந்தெந்த தொகுதிகளை யார் விட்டுக் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் 2 கட்சிகளும் தங்களது தலைமையிடம் (மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி) பேசி இறுதி முடிவை இன்றுக்குள் எடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளும் திமுக, காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

* மாஜி கிரிக்கெட் வீரர், கல்வியாளர் மம்தா கட்சியில் இணைந்தனர்
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் களம் களைகட்டத்தொடங்கி விட்டது. 144 பேர் கொண்ட பா.ஜ முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. நேற்று 291 தொகுதிகளில் போட்டியிடும் திரிணாமுல் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிப் சங்கர் பால், சந்தால் சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர் தனு ஹன்ஸ்டா மற்றும் இஸ்லாமிய அறிஞர் முப்தி அப்துல் மதீன் ஆகியோர் நேற்று முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேற்கு வங்க அணிக்காக விளையாடிய முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஷிப் சங்கர் பால் தற்போது கொல்கத்தா, துபான்கஞ்ச், கூச் பெஹார் ஆகிய இடங்களில் ‘ஷிப் சங்கர் பால் கிரிக்கெட் அகாடமி’யை நடத்தி வருகிறார்.

இதே போல் இஸ்லாமிய அறிஞர் முப்தி அப்துல் மதீன் அல்லது ‘மதீன் சாஹிப்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் மதீன், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்ளி மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ள 86 மதரஸாக்களுடன் தொடர்புகொண்டு பணியாற்றி வருகிறார். கல்வியாளர் தனுஸ்ரீ அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதுடன், பாங்குரா, ஜார்கிராம் மற்றும் புரூலியா ஆகிய மாவட்டங்களில் சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

* அசாம் தொகுதி பங்கீடு: பா.ஜ, காங். கூட்டணியில் நீடிக்கும் சிக்கல்
அசாம் சட்டப்பேரவை தேர்தல் ஏப்.9ல் நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. கூட்டணி இழுபறியைப்பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் பட்டியல் அறிவித்தது மற்ற கட்சிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. அதே போல் பா.ஜ கூட்டணியிலும் தொகுதி பங்கீடு சிக்கல் நீடிக்கிறது. இதனால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. இன்று முதல் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அசாம் ஜாதிய பரிஷத் கட்சி, 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் லூரின்ஜோதி கோகாய், கோவாங் தொகுதியிலும், செயல் தலைவர் (முன்னாள் ஒன்றிய அமைச்சர்) ராஜன் கோஹைன், பர்ஹாம்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இருப்பினும் மொத்தம் 10 தொகுதிகளில் கட்சி போட்டியிட உள்ளதாகவும், ஓரிரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியுடன் நட்பு ரீதியிலான போட்டி நடக்கும் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணைய ஆசைப்பட்டு அது முடியாமல் போனதால் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐயுடிஎப்) கட்சி தனியாக களம் காண்கிறது. மார்ச் 9ல் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.நேற்று மேலும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வரவிருக்கும் தேர்தலில், தங்கள் கட்சி 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: