பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தால் 2வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது: எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின.

நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. இதனால், முதல் நாளில் எந்த அலுவலும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், 2ம் நாளான நேற்று மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை எழுப்பின. எதிர்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தினார். ஆனால், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நடுவர் மற்றும் சமரச திருத்த மசோதாவை அவையில் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அவை 11.20 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு பிறகும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு அமளி செய்ததால், துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார். இதேபோல், மக்களவையிலும் இதே விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டபடி இருந்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.  பெட்ரோல், டீசல் விவகாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடக்கவில்லை.

டிவி ஒளிபரப்பில் டிஜிட்டல் பாகுபாடு

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி நேற்று பேசுகையில், ‘‘அரசு தரப்பு, எதிர்க்கட்சி என எந்த உறுப்பினராக இருந்தாலும், சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு டிஜிட்டல் பாகுபாடு நடக்கிறது. இங்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் என்ன செய்தாலும், அவற்றை நாடாளுமன்ற டிவி சேனலில் காட்டப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதை தவிர்க்க வேண்டும். கேமராக்கள் அனைவரையும் காட்ட வேண்டும்’’ என்றார். இதற்கு அவைத்தலைவர் ஓம்பிர்லா, ‘‘மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர், இங்கு நடக்கும் அமளியை நாட்டு மக்களுக்கு காட்ட வேண்டும் என விரும்புகிறாரா?’’ என கேட்டார்.

வழக்கமான நேரம் மாற்றம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த செப்டம்பரில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2 ஷிப்ட்களாக நடந்தது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாநிலங்களவையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை மக்களவையும் நடந்தன. இதே முறை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் தொடர்ந்த நிலையில், நேற்று முதல் இரு அவைகளும் வழக்கமான நேரத்திற்கு மாற்றப்பட்டன. அதன்படி, இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கின. இரு அவையிலும் சமூக இடைவெளி பின்பற்றும் விதமாக ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் எம்பிக்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: