தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு!: மத்திய அரசு..!!

டெல்லி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என அவர் கேட்டிருந்தார். மேலும் அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க சில இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய அறிக்கைகள், இந்திய தொல்லியல்துறையின் அதிகாரபூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையால் அகழாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக ஆதிச்சநல்லூர் உள்ளது.

ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டு ஆய்வறிஞர்கள் மற்றும் மத்திய தொல்லியல் துறையினரால் பலமுறை அகழாய்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: