அதிவேக பைக் பயணத்தை தட்டிக்கேட்டதால் தெலங்கானாவில் கலவரம்: வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு

திருமலை: தெலங்கானாவில் அதிவேக பைக் பயணத்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் வீடு, கடை மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் போலீசார் மீது சரமாரி கற்கள் வீசியதில் படுகாயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பைன்சா நகரில் உள்ள சுல்பிகர் காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர், பைக்கில் சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக சத்தம் எழுப்பியபடி அதிவேகமாக விதிமீறி பைக் ரேஸ் சென்றுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் வண்டியை நிறுத்திவிட்டு தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் சிறிது நேரத்தில் படிகள்ளி, பஞ்சேஷா சவுக், கோர்பகல்லி, பஸ் ஸ்டாண்ட் மற்றும் இதர பகுதிகளுக்கும் பரவியது. பைக் ரேஸ் சென்ற வாலிபர்களின் ஆதரவாளர்கள் சிலர் 2 ஆட்டோக்கள், ஒரு கார், 2 பைக்குகள் மற்றும் வீடு, கடைகளுக்கு தீ வைத்தனர். பல்வேறு வீடுகள் மீது கற்களும் வீசப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த பைன்சா நகர் போலீசார் அங்கு சென்றனர். இதேபோல், செய்தியாளர்களும் அங்கு சென்றனர். அப்போது கலவரக்காரர்கள் திடீரென போலீசார் மற்றும் நிருபர்கள் மீது சரமாரி கற்களை வீசி தாக்கினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி, 2 கான்ஸ்டபுள்கள் மற்றும் 3 நிருபர்கள் படுகாயமடைந்தனர். மேலும் மோதலில் 4 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் பைன்சா நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் 2வது நாளாக நேற்றும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: