இடஒதுக்கீட்டு முறை விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ்: நிலைப்பாட்டை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இடஒதுக்கீடு பின்பற்றப்படும் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த 2018ம் ஆண்டு அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக்பூஷன், நாகேஸ்வராவ், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநில தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, \”இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் அனைத்து மாநில இடஒதுக்கீடு தொடர்பான விளக்கங்களையும் கேட்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டில் மராத்தா மாநில உரிமையும் உள்ளது. இதில் சட்டபிரிவு 324ஏ என்பது பாதிக்கும் விவதமாக நீதிமன்றத்தின் விசாரணை எதுவும் அமைந்துவிடக் கூடாது’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள்,\”இந்த விவகாரத்தில் மாநில அரசு தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது.

அதனால் மராத்திய இடஒதுக்கீட்டில் அந்த மாநில அரசின் கருத்தை ஆய்வு செய்வது மட்டுமில்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. குறிப்பாக, மாநிலங்களில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் பின்பற்றலாமா, அதில் உள்ள சட்ட நடைமுறைகள் என்ன என்பது பற்றிய தங்களது நிலைப்பாட்டை வரும் 15ம் தேதிக்குள் முழு விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை அடுத்த திங்கட் கிழமைக்கு ஒத்தி வைத்தனர். தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பிரதான வழக்கை மராத்திய இடஒதுக்கீட்டு வழக்கு விசாரணை உத்தரவுக்குப் பிறகு விசாரிப்பதாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: