முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்துடன் சமக கூட்டணி: தூத்துக்குடியில் சரத்குமார் பேச்சு

தூத்துக்குடி: சமக கூட்டணி அமைக்கும் புதிய அணியில் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று சமக தலைவர் சரத்குமார் தூத்துக்குடியில் கூறினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சி பொதுச்செயலாளர் நடிகர் சரத்குமார் பேசியதாவது: ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு புதிய சின்னம் தரவேண்டும் என்று கூறி வருகிறோம். இப்படி புதிய சின்னத்துடனான போட்டி தான் சரியான போட்டியாக இருக்கும். கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகளை விட அதிகமான தோல்விகளை சந்தித்து இருக்கிறோம். ராமர் 14 வருடங்கள் வனவாசம் சென்றது போன்று நாமும் 13 வருடங்கள் முடிந்து 14வது வருடத்தில் அரியணை ஏறும் நேரம் வந்து விட்டது. கறிவேப்பிலையாக நாம் இருந்த காலம் இனிமேல் மாறவேண்டும்.

புதிய கூட்டணி தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. கொள்கை ரீதியாக நாங்கள் இணைகிறோம். எங்கள் முதல்வர் வேட்பாளராக கமல் போட்டியிடுவார். மேலும் சில கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சில தினங்களில் இதற்கான முடிவு தெரியும். பணம் கொடுத்தும், பிரியாணி கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும் சோம்பேறிகளாக்கி வைத்து இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். உள்ஒதுக்கீடு கொடுக்கிறாங்க. ஆனால் அது சமூக ரீதியாக இல்லை. வாக்கு வங்கியை பெறுவதற்காக சுயநலத்துடன் அறிவிக்கிறார்கள்.

எங்கள் கூட்டணியில் ராதாபுரம் தொகுதி வேட்பாளராக சமக அரசியல் ஆலோசகர் லாரன்ஸ், கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் ஜெயந்தி ஆகியோர் போட்டியிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது, இதனை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் முன்பு சமக சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இயக்கத்தின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் சரத்குமாருக்கு பாராட்டு தெரிவிப்பது உட்பட 25 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: