பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு காலி சிலிண்டர்களுடன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்:டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

பெங்களூரு: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து பெங்களுருவில் காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காலி சிலிண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, சமையல் கியாசின் விலை உயர்வு ஏழை எளிய மக்களை மிகவும் அதிகமாக பாதித்துள்ளது. இதைத்தொடர்ந்து பெங்களூரு ரயில்வே நிலையம் அருகே சங்கொலி ராயண்ணா சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெங்களூரு மத்திய காங்கிரஸ் தலைவர் சேகர், துணை தலைவர் சம்பத், மகளிர் அணி தலைவி புஷ்பா, எம்எல்ஏ சவும்யா ரெட்டி, கவிதா கேசி ரெட்டி, மாஜி கவுன்சிலர் உதய்சங்கர், மாஜி மேயர் மஞ்சுநாத்ரெட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைகளில் பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகை ஏந்தி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் பேசியதாவது காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவர் புஷ்பா, சவும்யா ரெட்டி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதற்காகவே இதில் கலந்து கொண்டேன். பெண்கள் ரோட்டிற்கு வந்து போராட்டம் நடத்தினால் அதன் சாபம் எப்பேர்பட்ட ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வு பெண்களை போராட்டம் நடத்தும் அளவிற்கு தள்ளியுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரம் என்றால் கூட அது என்னை பாதிக்காது. அதே நேரம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நிலையை நினைத்து பார்த்தால் எனது கண்ணில் ரத்தம் கசிகிறது. இந்தியாவில் 135 கோடிக்கும் அதிகம் பேர் வசிக்கிறோம். இதில் 52 சதவீதம் பேர் பெண்கள். சமையல் காஸ் விலை உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் பாஜவினர் வீதிக்கு வீதி நின்று பொய்களை அள்ளி வீசினர். பிரதமர் நரேந்திர மோடி நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று குரல் எழுப்பினார்.

வேலை வாய்ப்பு ஏராளமாக உருவாக்கி தரப்படும் என்பது போன்ற பொய்களை நம்பிய மக்கள் பாஜவுக்கு வாக்கு அளித்தனர். பாஜ ஆட்சி அமைந்த பிறகு பாஜ கட்சிக்கும் அக்கட்சியை ஆதரிக்கும் அதானி, அம்பானி ஆகிய கம்பெனிகளுக்கு மட்டுமே நல்ல காலம் பிறந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல்,டீசல் விலையில் ரூ.1 அதிகரித்தால் போதும் உடனே பாஜவின் வாய் சொல் வீரர்கள் வீதியில் நின்று வாய் கிழியும் அளவிற்கு போராட்டம் நடத்தினர்.

அதிலும் குறிப்பாக பாஜ அமைச்சர் ஈஸ்வரப்பா, அக்கா ஷோபா கரந்தலாஜே எம்பி போன்றோர் தினந்தோறும் போராட்டம் நடத்தினர். இப்போது பெட்ரோல் டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. சமையல் கியாஸ் விலை ரூ.344 என்றிலிருந்தது இப்போது ரூ.814 தாண்டிவிட்டது. இப்போது எம்பி ஷோபா அக்கா எங்கே இருக்கிறார்? இது பற்றி இப்போது வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறாரே அது ஏன்?

அது போல் மற்றொரு பாஜ தலைவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, சமையல் காஸ் விலை உயர்ந்த போது பிரதமருக்கு வளையல் அனுப்பி வைத்தார். இப்போது அதே ஸ்மிருதி ராணி என்ன செய்து கொண்டிருக்கிறார்? பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வு காய்கறி, சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையிலும் உயர்வை ஏற்படுத்திவிட்டன. இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி திண்டாடுகின்றனர். வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுதான் உண்மையில் நல்ல காலமா? என்பதை பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அவசிய பொருட்களின் விலை எவ்வளவு இருந்தது? இப்போது எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது என்பதை தெளிவாக விளக்கவேண்டும். பாஜவின் கொள்ளை ஆட்சியை எதிர்த்து 100 பேரவை தொகுதிகளில் நாளை முதல்( இன்று) போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடையும் வகையில் பெண்கள் ஆசிர்வதிக்க வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் மேம்பாலம் வழியாக காங்கிரஸ் பவன் வரை காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காலி சிலிண்டர்களுடன் ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இது தொடக்கம் - புஷ்பா

பாஜ அரசுக்கு எதிரான போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. இனிமேல் தினந்தோறும் எங்களின் போராட்டம் நடைபெறும். பாஜ ஆட்சியை ஒழிக்கும் வரை நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்.

* நல்ல காலம் பிறந்துவிட்டதா? -சவும்யா ரெட்டி ஆவேசம்

போராட்டத்தில் எம்எல்ஏ சவும்யா ரெட்டி பேசுகையில், சமையல் காஸ் விலை 2 மாதத்தில் 7 முறை உயர்ந்துவிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.344 என இருந்த சிலிண்டர் விலை இப்போது ரூ.900 வரை உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் நரேந்திர மோடி கூறிய அட்சா தினமா? ( நல்லகாலம் ) அதானி, அம்பானி ஆகியோருக்கும் பாஜவின் மோடி, அமித்ஷாவுக்கு மட்டும்தான் உண்மையில் நல்ல காலம் பிறந்துள்ளது.

* சொல்வது ஒன்று: செய்வது மற்றொன்று

காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி, ‘‘பாஜவினர் இப்போது மட்டும் அல்ல; எப்போதும் அவர்கள் சொல்வதை செய்வதில்லை. சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாகவே இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் பொருட்களின் விலை ரூ.1 உயர்ந்தால் கூட பாஜவின் சிடி ரவி, ஷோபா உள்ளிட்டோர் வாய் கிழியும் வரை பேசுவர். இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பதே தெரியவில்லை. பிரதமர் மோடி வாயை திறந்து பேசினால் ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகவே இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.95, ரூ.86 என உயர்ந்துள்ள நிலையில் பாஜவினர் எதுவும் நடக்காதது போல் வாய்மூடி மவுனமாக இருக்கின்றனர்.

Related Stories: