யானைகள் தாக்குதலை தடுக்க சிறப்பு காரிடார் கலெக்டரின் வாக்குறுதியால் முற்றுகை போராட்டம் ரத்து: விவசாய சங்கம் முடிவு

பங்காருபேட்டை: யானைகள் தாக்குதலை தடுக்க சிறப்பு காரிடார் அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தை விவசாய சங்கம் ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

 கோலார் மாவட்டம் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் எல்லையில் உள்ளதால், இரு மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைநிலங்களில் நுழைந்து விவசாயிகள் பயிர் செய்துள்ள விளைச்சல்களை நாசப்படுத்துவதுடன் மனிதர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக மாவட்டத்தின் பங்காருபேட்டை தாலுகாவில் உள்ள பூதிகோட்டை மற்றும் காமசமுத்திரம் ஆகிய இரு ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்கள் யானைகள் தாக்குதலால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்த பிரச்னையில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் எல்லையோர வனப்பகுதியில் எலிபென்ட் காரிடார் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் வைத்த கோரிக்கைக்கு இன்னும் பதில் கொடுக்காததால், மார்ச் 4ம் தேதி கலெக்டர் அலுவல முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன் முத்தாய்ப்பாக பங்காருபேட்டையில் நேற்று தொப்பனஹள்ளி லட்சுமி நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் தாசில்தார் தயானந்தா நேரில் வந்து பேசும்போது, எலிபென்ட் காரிடார் அமைக்க வேண்டும் என்ற உங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதாக கலெக்டர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயலதிகாரி ஆகியோர் உறுதி கொடுத்துள்ளனர். ஆகவே தற்போது நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுவதுடன் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தையும் கைவிட வேண்டும்’’ என்று கேட்டு கொண்டார். அதையேற்று கொண்ட போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டம் ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Related Stories:

>