உடுமலை, காங்கயம் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை:பதினான்காவது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்காத தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் குறைந்தளவே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

இந்நிலையில், உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மாவட்ட இணை செயலாளர் மணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் விஸ்வநாதன், சோமு, ராஜா, சவுந்தரராஜன், ஜகாங்கீர், நாகராஜ், செல்லமுத்து, நாச்சிமுத்து உட்பட ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கயம்: இதே போல் காங்கயத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காங்கயம் பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு மண்டல துணைத்தலைவர் நடராஜன், பணியாளர் சம்மேளனம் பொதுச் செயலாளர் துளசிமணி, ஓய்வு பெற்றோர் நல சங்கம் நாச்சிமுத்து உட்பட 150 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தாராபுரம் : தாராபுரம் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தம் செய்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொமுச பொதுச் செயலாளர் துரைசாமி தலைமையில் தலைமை நிலைய செயலாளர் சுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 1-09-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய பலன்களை வழங்கக்கோரியும் உயர்ந்து வரும் டீசல் விலையை ஈடுகட்ட அரசு நிதி ஒதுக்க கோரியும் 2011 ஆம் ஆண்டில் இருந்து 60 நாட்கள் ஈடுசெய்யும் விடுப்பு எழுதிப் பெற்றும் வழங்கப்படாத தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தாராபுரத்தில் 90 சதவீத அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்ந்த பிரதிநிதிகள் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: