திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேச்சில் வடக்கு, தெற்கு அரசியல் இருந்ததா?...பாஜக - காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே மோதல்

புதுடெல்லி: திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி வடக்கு, தெற்கு வாக்காளர்கள் குறித்து பேசிய விவகாரத்தில், பாஜக - காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் பேசிய ராகுல், ‘கடந்த 15 ஆண்டுகளாக நான்  வடமாநிலங்களின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலங்களின் அரசியலை பார்த்தேன். தென்மாநிலமான கேரளாவுக்கு வருவது எனக்கு மிகவும்  புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இங்குள்ள மக்கள் பிரச்னைகளில்  ஆர்வம் காட்டுகிறார்கள்.  மேலோட்டமாக பார்க்காமல் பிரச்னைகளை  பற்றி விரிவாக பேசுகிறார்கள்’ என்று பேசியிருந்தார்.

ராகுலின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறிவிட்டது. வடமாநிலம், தென்மாநிலம் என்று வாக்களித்த வாக்காளர்களை பிரித்து பார்த்து ராகுல் பேசியதாக பாஜக குற்றம்சாட்டியது. மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் ராகுலுக்க எதிராக குரல்  எழுப்பி உள்ளனர். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ராகுலின் கருத்தை வரவேற்றனர். அதே நேரத்தில், 23 அதிருப்தி தலைவர்களின் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் ராகுலுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பாஜக பிரிவினை அரசியல் செய்கிறது. வடமாநில,  ெதன்மாநில என்றில்லாமல் அனைத்து  வாக்காளர்களுக்கும் புரிதல். தனிப்பட்ட முறையில் எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் வாக்காளர்களை  மதிக்க வேண்டும்’ என்றார்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், ‘ராகுல் தனது தனிப்பட்ட  அனுபவத்தைப் பகிர்ந்து இருக்கலாம். அவர் நாட்டின் எந்தப் பகுதி மக்களையும்  அவமதிக்கவில்லை. எந்தச் சூழலில் சொன்னார் என்பதை அவர்தான்   தெளிவுபடுத்தப்படும். அப்போதுதான் இவ்விவகாரம் முடிவுக்கு வரும்’ என்றார்.

ராகுலின் பேச்சுக்கு எதிராக கருத்துக் கூறியவர்களில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, கிரண் ரிஜிஜூ,  ஹர்தீப் சிங் பூரி, எஸ்.ஜெய்சங்கர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி, ரேபரேலி  தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘​மத்திய, மாநில அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து ராகுல்காந்தி மக்களுடன் உரையாற்றுகிறார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது  பூஜ்ஜியமாக உள்ளது. சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் அனைத்தும் முடங்கி உள்ளன. அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை மக்கள் இழந்துவிட்டார்கள். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்காமல்  பிரச்னையை பாஜக திசை திருப்புகிறது’ என்றார்.

Related Stories: