6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் புதுச்சேரி அரசு கவிழ்ந்தது: கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் நாராயணசாமி

புதுச்சேரி: புதுவைசட்டசபையில் நேற்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக  முதல்வர், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேறினர். இதைதொடர்ந்து நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார். கவர்னர் தமிழிசையை சந்தித்து நாராயணசாமி தனது அமைச்சரவையின் ராஜினாமாவை சமர்ப்பித்தார். புதுச்சேரியில் 2016ம் ஆண்டு 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 4 வருடம் 9 மாத காலத்தை பூர்த்தி செய்திருந்த வேளையில் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவையில் இருந்த 2 அமைச்சர்கள் மட்டுமின்றி 2 எம்.எல்.ஏ.க்களும் தங்களது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ. ஆளுங்கட்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசுக்கான ஆதரவு 14 ஆக குறைந்தது. ஆளும் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கவர்னர் தமிழிசையிடம் எதிர்கட்சிகள் கடந்த 17ம் தேதி கடிதம் கொடுத்தனர். அதன்படி 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு, கவர்னர் உத்தரவிட்டார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் இருவரும் நேற்று முன்தினம் தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் சிவக்கொழுந்திடம் கடிதம் கொடுத்தனர். இதை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதால், அரசுக்கான ஆதரவும் 12 ஆக குறைந்தது.

இந்தநிலையில், கவர்னர் அறிவித்தபடி சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நியமன எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். சபையில் ஆளுங்கட்சிக்கு காங்கிரஸ்-9 (சபாநாயகர் உள்பட), தி.மு.க.-2, சுயேட்சை-1 என மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அ.தி.மு.க-4, பாஜ நியமன எம்.எல்.ஏ.க்கள்-3 என மொத்தம் 14 பேர் பங்கேற்றனர். சபாநாயகர்  சிவக்கொழுந்து திருக்குறளை வாசித்து சபையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை சபாநாயகர் முன்மொழிந்தார்.

இதன்மீது முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர், தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்து சாதனைகளை பட்டியலிட்டார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து எங்கள் ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றனர். புதுச்சேரி அரசை மத்திய பாஜ அரசு தொடர்ந்து புறக்கணித்தது. பல ஆண்டுகளாக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் ஆட்சியின் பதவி காலம் முடியும் நிலையில் ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். வாய்மையே வெல்லும். மக்களுக்கு எதிரி யார்? நல்லது செய்பவர்கள் யார் என்பதை மக்கள் மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பேசினார்.  

இதைத்தொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன் எழுந்து நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் அமைதி காத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து, உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உள்ளது என தெரிவித்துவிட்டார்கள். இப்போது இந்த பிரச்னையை எழுப்புவது தேவையில்லாதது என பேசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சபையில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளியேறினர்.

இதன்பின், சபாநாயகர் சிவக்கொழுந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்துவிட்டதாக அறிவித்தார். தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள் கூட்டணி கட்சியினருடன் துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து அமைச்சரவை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினர். அதன்படி எதிர்க்கட்சிகளை ஆட்சியமைக்க கவர்னர் தமிழிசை அழைப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராவிட்டால் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும். ஆனால், பாஜகவினர், ரங்கசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக புதுச்சேரி சட்டசபையை சுற்றிலும் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிருஷ்ணியா மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டசபை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு  செய்யப்பட்டன.

* ஓட்டெடுப்புக்கு விடாமல் தோல்வி என்று அறிவிக்கலாமா?

புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் இருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்து சட்டமன்றத்தில் உரையாற்றினேன். அந்த தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேசிய பிறகு அதன் மீது சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நாங்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ஓட்டெடுபுக்கு விடுகிறேன் என்று சபாநாயகர் அறிவிக்க வேண்டும்.

ஆளுங்கட்சி யாரும் இல்லாததால் எதிர்க்கட்சியின் எண்ணிக்கையை எண்ணி, எவ்வளவு பேர் எதிர்த்து வாக்களிக்கிறார்கள் என்று பதிவு செய்தபிறகு தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். வாக்கெடுப்பு நடத்தாமல் எப்படி மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்ல முடியும். இது ஒரு சட்டப்பிரச்னை. இதுசம்பந்தமாக சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசுவோம்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: