போடி அருகே பத்திரகாளிபுரத்தில் வாறுகால் வசதியில்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்-பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

போடி : போடி அருகே, பத்திரகாளிபுரத்தில் போதிய வாறுகால் வசதியில்லாததால், சாலையில் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. போடி அருகே, போடேந்திரபுரம் வழியாக தேனி செல்லும் மெயின்ரோட்டில் பத்திரகாளிபுரம் உள்ளது. இங்கு சுமார் 7,000 பொதுமக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

இங்கு போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். தெருக்களில் வாறுகால் வசதியில்லை. மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. குறிப்பாக மெயின்ரோட்டில் வாறுகால் வசதியில்லாததால், வீடு, கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி குளமாகிறது. இதில், கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், டொம்புச்சேரி கிராம ஊராட்சியிலும் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக ஊரில் இதே நிலைதான் என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். துணை முதல்வரின் தொகுதியில் உள்ள கிராமத்தில் போதிய அடிப்படை வசதியில்லாததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், பத்திரகாளிபுரம் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: