பீகாரில் விஷ சாராயம் குடித்து 5 பேர் பரிதாப பலி

முசாபர்பூர்: பீகார் மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வதற்கும், மது அருந்துவதற்கும் தடை உள்ளது. இந்நிலையில், முசாபர்பூர் மாவட்டம் கத்ரா காவல் நிலையப் பகுதியின் தர்கா கிராமத்தில் சிலர் விஷ சாராயம் குடித்து இறந்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்த கெலோவன் மஞ்சி தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் எஸ்பி ஜெயந்த் காந்த் கூறுகையில், ‘கிராமத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர். ஆனால் விஷம் கலந்த மது அருந்தியதால் தான் இவர்கள் இறந்தனரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இருந்தும், இவ்விவகாரம் தொடர்பாக கத்ரா காவல் நிலைய போலீஸ் அதிகாரி சிக்கந்தர் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அடையாளம் தெரியாத நபர்கள் 5 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரணாப்குமார், தர்கா கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். விஷ சாராயம் குடித்து 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் அரசு மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: