காபி பைத்தியங்கள்!

‘போர் ஒரு துயரம் என்றால் காபிதான் ஒரே ஆறுதல்’ என்று விநோதமான பழமொழி ஒன்று அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்கர்கள் இரண்டு உலகப் போர்களையும் ஒரு உள்நாட்டு யுத்தத்தையும் எதிர்கொண்டவர்கள். அவர்களுக்குப் போரின் சகல வலிகளும் தெரியும். ஒரு நாட்டில் போர் ஏற்படும்போது அங்கு முதலில் பாதிக்கப்படுவது உணவுப் பொருள் பகிர்மானம்தான். பண்டைய காலம் முதலே ஒரு நாட்டின் மீது படை எடுக்கும் அண்டை நாட்டு அரசு கோட்டையை முற்றுகையிடும்போது முதலில் தடை செய்வது கோட்டைக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத்தான். உணவு வழங்கலைத் தடை செய்தால் யாராய் இருந்தாலும் தன்னால் சரணடைந்துதானே ஆக வேண்டும்?

 அமெரிக்காவின் சிவில் யுத்தம் நடைபெற்ற நாட்களில் அங்கு உணவுத் தட்டுப்பாடு நிலவியது. பஞ்சத்தால் ஏழை மக்கள் வாடித் தவித்தனர். ஒரு கட்டத்தில் ராணுவ வீரர்களுக்கான உணவு வழங்குதலிலும் பற்றாக்குறை உருவானது. குறிப்பாக, காபி வழங்குவதில் சிக்கல் உருவானது. எனவே, அதனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார்கள். இது அமெரிக்க வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்நாட்களில் ராணுவ வீரர்கள் எழுதிய பல டைரிகள் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் அந்நாட்களில் கிட்டதட்ட பெரும்பாலானோர் எழுதியிருக்கும் சொல் காபிதான். போர், குண்டு, பீரங்கி, அதிகாரிகள், ராணுவ வீரன், லிங்கன் என்ற எந்தச் சொல்லையும்விட காபி என்ற சொல்தான் அந்நாட்களில் அதிகமான ராணுவ வீரர்களால் எழுதப்பட்டது என்று சொன்னால் அவர்களின் காபி பைத்தியம் எந்த அளவுக்கு முற்றியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்போது மேலே சொன்ன பழமொழியைப் படியுங்கள் அது உருவான காரணம் புரியும்.

Related Stories: