நிழலிலும் தோட்டம் அமைக்கலாம்!

“எங்க வீட்டில் கொஞ்சூண்டு இடம் இருக்கு. அங்கே ஏதாவது செடி, கொடி வளர்க்கலாம்னு ஆசை. ஆனா எப்போ பார்த்தாலும் அக்கம் பக்கத்து பில்டிங்குகளோட நிழல் விழுந்துக்கிட்டே இருக்கு. சூரிய வெளிச்சம் ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் அங்கே விழுந்தாலே அதிசயம். இப்படிப்பட்ட இடத்துலே ஏதாவது உபயோகமான செடி, கொடி வளர்க்க முடியுமா?” என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது?பூச்செடி, பழச்செடி, மூலிகை, காய்கறி என்று எந்தச் செடியை வேண்டுமானாலும் வளர்க்கலாம். சில செடி வகைகளுக்கு சூரிய ஒளியைப் போல, குறிப்பிட்ட மணி நேரம் நிழல் விழவேண்டியதும் அவசியம்தான். ஆங்கிலத்தில் partial shade garden என்பார்கள். சாலட் வகை காய்கறிகள் இம்மாதிரி நிழல் தோட்டங்களில் சூப்பராக வளரும். நிறைய வகையான செடிகளையும், காய்கறிகளையும் பயிரிட்டு நீங்கள் ‘சிட்டி ஃபார்மர்’ என்று பந்தாவாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

ஓக்கே. பசுமையான ஒரு தோட்டத்தை அமைக்க முடிவெடுத்து விட்டீர்கள். உங்களுடைய தோட்டம் எவ்வளவு பெரியது, உங்களுக்கு என்னென்ன செடிகளை வளர்க்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டு, முட்டைகோசு, கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் கீரைவகைகள் பகுதிநேர வெயில் பகுதிகளில் நன்றாக வளரும்.

வீட்டை சுற்றி தோட்டம் போட இடமில்லை. ப்ளாட்டில் வசிக்கிறேன். என்ன செய்வது என்று கேட்டால் அதற்கும் வழியிருக்கிறது. ஜன்னல், மாடி போன்ற இடங்களை நீங்கள் குட்டியூண்டு கார்டன் ஆக்கலாம். வீட்டின் எந்தப் பகுதியை விடவும் ஜன்னல்தான் தோட்டம் அமைப்பதற்கு வாகான பகுதி. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். ஜன்னல் மேடைக்கு வெளிப்பக்கத்தில் பெட்டியைப் பொருத்தி அதிலும் அழகான செடிகளை வளர்க்க முடியும். ஜன்னல் தோட்டத்தில் பொதுவாக இலை அழகுச் செடிகளை வளர்ப்பதே வசதி.சாதாரண தட்டுகளிலும் கூட கள்ளி, கற்றாழை போன்ற செடிகளை வளர்க்கலாம்.

மாடியில் இரும்பு வளையம், சிமென்ட் குழாய்களை பயன்படுத்தி கொடிகளை வளர்க்க முடியும். பாகற்காய், புடலங்காய், பீன்ஸ், அவைரக்காய் போன்றவை அபாரமாக வளரும்.

தோட்டம் வளர்க்கும் எண்ணம் வந்துவிட்டால் அருகிலிருக்கும் நர்சரி கார்டனை உடனே தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்வார்கள்.

நமக்கே நமக்கு என்று ஒரு தோட்டம் இருந்தால் நன்றாகதானே இருக்கும்?

Related Stories: