செங்கோட்டை வன்முறை வழக்கு: நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல்

டெல்லி: செங்கோட்டை வன்முறை வழக்கு தொடர்பாக கைதான நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், சிலர் டெல்லி செங்கோட்டைக்குள் சென்று அத்துமீறலில் ஈடுபட்டனர். மேலும், டெல்லியின் பல்வேறு இடங்களில் போலீசாருடன் நடந்த மோதலில், 500க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதில் டெல்லி செங்கோட்டை வன்முறைக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் பஞ்சாபை சேர்ந்த நடிகர் தீப் சித்து என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

சம்பவம் நடந்த 14 நாட்களுக்கு பின் டெல்லி போலீசார் நடிகர் தீப் சித்துவை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற அனுமதியின் பேரில் போலீஸ் காவலில் தீப் சித்து வைக்கப்பட்டார். அவரிடம், டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரை கடந்த சில நாட்களுக்கு முன் வன்முறை நடந்த செங்கோட்டை பகுதிக்கு அழைத்து சென்று, சம்பவம் நடந்தது குறித்து நடித்துக் காட்ட கூறினர். இந்நிலையில், இன்றுடன் போலீஸ் காவல் முடிந்த நிலையில் இவ்வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீசார் தரப்பில் தீப் சித்துவை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீப் சித்துவை மேலும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Related Stories: