தமிழகத்தில் வடக்கு-தெற்காக, கிழக்கு-மேற்காக என பார்த்தால் மொத்தம் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. என்ன! தமிழகத்தில் 234 தொகுதிகளாச்சே? 16 என்று தப்பா புள்ளி விவரம் தர்றீங்களா என குழம்ப வேண்டாம். இது, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பெயர்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை. ஆரம்பத்தில் ஊர் பெயர்களில் மட்டும்தான் தொகுதிகள் இருந்தன. இந்த திசைகளுக்கு வேலை இல்லாமல் இருந்தது. ஆனால் மக்கள் தொகை பெருகி நகரங்கள் பெருநகரங்களான பிறகுதான் ஊருடன் திசைகளும் சேர்ந்துக் கொண்டன. விரிவாக்கம் என்ற பெயரில் பாரம்பரிய ஊர்கள் மாநகர எல்லைக்குள் போனாலும் அந்த ஊரின் பெயர்களின் தொகுதிகள் அமைக்கப்படுவதில்லை. இருக்கும் 4 திசைகளையும் மாநகருடன் சேர்த்து தொகுதிகளாக பிரித்து விடுகின்றனர்.
