ஊழலை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு மிரட்டல்; 2 ஐஏஎஸ் உட்பட 11 அதிகாரிகள் மீது வழக்கு: சிண்டிகேட் அமைத்து துன்புறுத்தியதால் நடவடிக்கை

லக்னோ: ஊழலை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகாரில் 2 ஐஏஎஸ் உட்பட 11 அதிகாரிகள் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மகாநகர் காவல் நிலைய போலீசார், மாநில பெண்கள் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒன்பது அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீஸ் ஏடிசிபி பிராச்சி சிங் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநில திட்டமிடல் நிறுவனத்தின் மூத்த பெண் அதிகாரி ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திடம் தனது துறை சார்ந்த அதிகாரிகள் மீது மோசடி, மிரட்டல் புகார் ஒன்றை அளித்தார். அதனை மாநில மகளிர் ஆணையம் விசாரித்தது.

அவர்களின் பரிந்துரையின் பேரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சத்வீர் சிங், தற்போதைய ஐஏஎஸ் அதிகாரிகள் பிரகாஷ் திரிபாதி, அங்கித் குமார் அகர்வால், மாநில திட்டமிடல் நிறுவன அதிகாரி  சையத் அஃபாக், டாக்டர் சாந்த்ரம், தினேஷ்குமார், டாக்டர் ராஜேந்திர குமார்  யாதவ், டாக்டர் திவ்யா உள்ளிட்ட 11 அதிகாரிகள் மீது கிரிமினல் சதி, மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் கொடுத்துள்ளனர்.

துறை சார்ந்த ஆவணங்கள் மூலம் அந்த பெண் அதிகாரியை ஊழல் வழக்கில் சிக்கவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பெண் அதிகாரி துறையில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார்  அளித்துள்ளார். ஆனால், அந்த துறை அதிகாரி டாக்டர் சத்வீர் சிங், குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியதற்காக பணி சார்ந்த நெருக்கடியை கொடுத்து மனு உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளார். மூத்த மாநில திட்டத் துறை  அதிகாரிகளான அங்கித் குமார் அகர்வால், பிரகாஷ் ஆகியோரிடம் அந்த பெண் அதிகாரி மீண்டும் புகார் செய்தார். ஆனால் அவர்களும் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து அந்த பெண் அதிகாரிக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் செய்கையின் மூலம் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அதனால், அந்த பெண் அதிகாரி மாநில மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளார். அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 2 ஐஏஎஸ் அதிகாரி உட்பட 11 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: