70,000 அடி உயரத்தில் 90 நாள் பறந்து தாக்கும் விமானப்படைக்கு பலம் சேர்க்க தயாராகிறது அதிநவீன டிரோன்: உளவு பணியிலும் கலக்கும்

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்காக 70 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் பறந்து தாக்குதல் நடத்தும் அதிநவீன டிரோன் தயாராகி வருகிறது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டு பாதுகாப்புக்காக தற்போது புதிதாக டிரோன் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்களின் முக்கிய எதிரிகளை இந்த ஆளில்லா டிரோன்கள் மூலமாகவே தாக்கி அழித்து கொண்டிருக்கின்றன. உளவு பார்ப்பது, ஆயுதங்களை சப்ளை செய்வது, வெடிகுண்டுளாக மாறி தாக்குதல் நடத்துவது, சிறிய ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது உட்பட பல்வேறு போர் வியூகங்களுக்கு டிரோன் பயன்படுத்தப்படுகிறது. உலகின் அபாயகரமான ஆயுதமாக இது மாறி வருகிறது. இந்திய ராணுவத்திலும் டிரோன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்காக, மிகவும் அதிநவீன ஆளில்லா டிரோன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

* இது, எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வல்லது.

* 90 நாட்களுக்கு தொடர்ந்து வானில் பறந்து உளவு பார்க்க கூடியது.

* வானில் நிலை கொண்டு, விமானப்படையின் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் திறனும் படைத்தது.

* இதற்காக, இதில் சூரிய எரிசக்தி பயன்படுத்தப்பட உள்ளது.

* எதிரி நாடுகளின் பகுதிகளில் உளவு பார்த்து, அந்த காட்சிகளை நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒளிபரப்பும் வசதியும் கொண்டது.

* போர்க் காலத்தில் மட்டுமின்றி, பேரிடர் காலங்களிலும் இது உதவும்.

மேலும், விமானப்படைக்கு மட்டுமின்றி, கடல் பகுதிகளை கண்காணிக்க, கடற்படையும், கப்பல் போக்குவரத்து துறையும் இவற்றை அதிகளவில் வாங்க இருப்பதாகவும் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இது பயன்பாட்டுக் கொண்டு வரப்படும் என்றும் இதை தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: