பயங்கரவாதிகளால் உயிருக்கு ஆபத்து: தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலைக்கு Y+ பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை.!!!

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, கர்நாடகா  மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் அண்ணாமலை பணியாற்றினார். இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த  அண்ணாமலை, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் அண்ணாமலை தன்னை  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். தொடர்ந்து, அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில், பாஜக தலைவர்களாக பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹச்.ராஜா, சி.பி.  ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரிசையில் அண்ணாமலை இடம் பிடித்தார். பாஜகவின் இணைந்த நாள் முதல் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.

எனவே, தமிழகத்தில் முக்கிய பாஜக தலைவராக அண்ணாமலை பார்க்கப்படுகிறார். இந்நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களால் ஆபத்து இருப்பதாக மாவட்ட  போலீஸ் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

3 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் மத்திய ஆய்வு குழு, இந்தியாவில் யார் யாருக்கெல்லாம் அச்சுறுத்தல்கள் உள்ளது என்றும் எந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதையெல்லாம் ஆய்வு செய்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது  வழக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: