சுமுகமான சூழ்நிலை உருவாகும் வரை பேச்சுவார்த்தை கிடையாது: போராட்டம் தொடரும் என விவசாய சங்க தலைவர்கள் திட்டவட்டம்

டெல்லி: சுமுகமான சூழ்நிலையை உருவாக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை எதையும் நடத்தப் போவதில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய பல சுற்று பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் அளிக்காத நிலையில் டெல்லி எல்லைகளில் அவர்களின் போராட்டம் நீடிக்கிறது.

இதனிடையே வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது என்ற மத்திய அரசின் நிலை தொடரும் என்ற பிரதமரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு போராடும் விவசாயிகள் தங்கியுள்ள முகாம்களை தாக்குவது, பதற்றத்தை உருவாக்குவது, இணைய சேவையை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு சுமுகமான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் திரண்ட லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை டெல்லியில் திரண்டு போராட்டத்தை மேலும் தீவிரமாக தொடர முடிவு செய்துள்ளனர். பக்பத் நகரில் திரண்ட விவசாயிகளின் கொந்தளிப்பான உணர்வுகளோடு நடந்த மகா பஞ்சாயத்தை தொடர்ந்து பிஜினு நகரிலும் இன்று மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அரியானா மாநிலம் ஜிம்த் நகரில் அடுத்த பஞ்சாயத்து நாளை மறுதினம் நடக்க உள்ளது. அடுத்தத்துக்கு நடக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பிறகு தவறாக கைது செய்யப்பட 163 விவசாயிகளுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர்கள் குழுவை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. டிராக்டர் பேரணியின் போது பலர் காணாமல் போயிருப்பதாக அதிர வைத்துள்ள கூட்டமைப்பு நிர்வாகிகள் அவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசும், டெல்லி போலீசாரும், ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: