நான்.. நீ.. நாம் வாழவே...

நன்றி குங்குமம் தோழி

எளிமையை அடையாளமாக்கி, பார்வையில் மோனோலிசாவாய்  புன்னகைக்கிறார் இயக்குநர் ரஞ்சித்தின் காதல் மனைவி அனிதா. இயக்குநராக ரஞ்சித் தன் படங்களில் காதல் காட்சிகளை சுவராஸ்யப்படுத்த எங்களுக்குள் இருந்த காதலே காரணம் என்கிறார் அழுத்தமாய். மார்கழித் திங்கள் பனி படர்ந்த காலைப் பொழுதில் அனிதாவை சந்தித்தபோது, அவர்களின் வீடு குளிர்ச்சியும்ம், வண்ணமும் கலந்த கலைக்கூடமாய் காட்சி தந்தது. கல்லூரி காலத்தில் ரஞ்சித்திற்கும் தனக்குமான காதல்... தன் கணவராகவும் இயக்குநராகவும் ரஞ்சித்... மகள் மகிழினி... என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் அனிதா.

இயக்குநர் ரஞ்சித்தை சந்திப்பதற்கு முன் அனிதா…

மரங்கள் சூழ, மறைந்து கண்ணாமூச்சி காட்டி நிற்கும் கல்லூரியின் வளாகம் நிறைய விசயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது. அரசியல் சிக்கல்கள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்படுவது. அதையெல்லாம் கடந்து நான் படித்த அரசு கவின்கலைக் கல்லூரி ஒரு நல்ல சூழலை, அழகான பிணைப்பை எங்களுக்குள் விதைத்தது. இயல்பாகவே நான் நன்றாக வரைவேன். சின்ன வயதிலே வரைதல்  எனக்கு வசமானது. அம்மா எப்படி புடவை கட்டுவாங்க, எப்படி கொண்டை போடுவாங்க, எப்படி துணி காய வைப்பாங்கஎன, அம்மாவில் இருந்தே எனது ஓவியம் தொடங்கியது.

பள்ளிப் படிப்பை முடித்தபோது என் ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர், இதற்கெனத் தனியாக ஓவியக் கல்லூரி இருப்பதைத் தெரிவித்து முயற்சி செய்யச் சொன்னார். முதலில் அந்தப் படிப்புக்கு மறுத்த என் பெற்றோர், அரசு கவின் கலைக் கல்லூரியின் சூழலைப் பார்த்ததும் என் விருப்பத்திற்கு சம்மதித்தனர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்காக வந்த மாணவர்கள் அனைவரும் முறையான பயிற்சி எடுத்து வந்தார்கள். நான் பயிற்சி இல்லாமல் நேராக கலந்து கொண்டேன். வரைதல் குறித்த அறிதல், அகடமிக்காகவும் டெக்னிக்கலாகவும் தெரியாத நிலையில், முதல் முயற்சியில் வாய்ப்பை இழந்தேன்.

ஆனால் எத்தனை வருடமானாலும் காத்திருந்தாவது இந்தக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியானேன். ஓவியர் சந்துருவிடம் முறையான பயிற்சி எடுத்துவிட்டு இரண்டாவது முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோதும் நான் தேர்வாகவில்லை. நான் நன்றாக வரைகிறேன். இயல்பிலேயே அந்தத் திறமை என்னிடம் இருக்கு. முறையான பயிற்சியுடன் நுழைவுத் தேர்வை சந்தித்தும் இந்த முறையும் நான் தேர்வாகவில்லை.

உள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. சென்னை கவின்கலைக் கல்லூரியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வலி எனக்குள் நிறைய இருந்தது. நான் துவண்டு போனதைப் பார்த்த என் பெற்றோர் பேமென்ட் சீட்டில் கல்லூரியில் என்னைச் சேர்த்தார்கள். கல்லூரிக்குள் நுழைந்த பிறகுதான் என்னைக் கல்லூரி நிர்வாகம் ஏன் தேர்வு செய்யவில்லை என்கிற அரசியல் புரிந்தது. என் திறமையை அங்கீகரிக்காத கோபம் என் ஓவியங்களில் வெளிப்பட்டது.

இரவு நீண்ட நேரம்கூட கல்லூரி வளாகத்தில் ஓவியங்களை வரைந்து என் திறமையை மெருகேற்றி இருக்கிறேன். பி.எஃப்.எ. முடித்த நிலையில், அதே கல்லூரியில் எம்.எஃப்.எ. படித்துக் கொண்டே எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் விஷ்காம் பிரிவின் லெக்சரராக பணியில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் ஆர்க்கிடெச்சர் பிரிவில் லெக்சரராக வேலை பார்த்தேன். பிறகு ரஞ்சித்தோடு திருமணம். மகள் மகிழினி என வாழ்க்கை அழகாக நகர்கிறது.

காதலராக ரஞ்சித் பற்றி…

படிக்கும்போது அவர் ரொம்பவே ஜாலியான லவ்வபிள் பாய். (பழைய நினைவுகளில் மூழ்கிச் சிரிக்கிறார் அனிதா). காதலில் அவருக்கு ப்ளேபாய் ரோல்தான். அது அட்டகத்தி படத்திலேயே புரிந்திருக்கும். அவரது படத்தில்வரும் ரசனையான பல காதல்காட்சிகள், காதல் வசனங்கள் எங்கள் வாழ்க்கையில் நிஜத்தில் நடந்தவையாகத்தான் இருக்கும். படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் நான் அவரிடத்தில் பேசியவை. நான் ஓவியக் கல்லூரியில் முதல் முறை நுழைவுத் தேர்வுக்கு சென்றபோது, அவருக்கு அது இரண்டாவது வாய்ப்பு. என்னைப் பார்த்ததுமே அவருக்குள் ஒரு ஈர்ப்பு வந்திருக்கு.

அங்கிருந்த மாணவர்கள் வித்தியாசமான கெட்டப்பில் நீண்ட முடிகளோடு கேங்காக இருந்தார்கள். அந்தச் சூழல் எனக்கு ரொம்பவே புதுசு. பெண்கள் குறைவாய் இருந்தோம். நான் தனிமையை உணர்ந்தேன். அமைதியாக அவர்களைக் கவனித்தேன். எல்லா மாணவர்களும் சிறப்பாக வரைந்தார்கள். ரஞ்சித் மட்டும் என்னை அணுகி ‘இந்தப் பென்சிலால் வரையாதீங்க, இந்தப் பென்சிலால் வரைங்க’ என பென்சில் அறிமுகம் தந்தார். சரியெனத் தலையாட்டினேன். சட்டுனு ஐ.டி கார்டைத் திருப்பி என் பெயரைப் பார்த்தார். பிறகு போய்விட்டார்.

வெளியே வந்தபிறகுதான் கவனித்தேன், வேறு ஒருவரது ஸ்கேல் தவறுதலாய் என்னிடம் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுக்க மீண்டும் ஹாலுக்குள் சென்றேன். மாணவர்களின் கேங் அங்கேயே இருந்தார்கள். இந்த ஸ்கேல்.. என்று இழுத்தேன். சொல்லுங்க, என வேகமாய் முன்வந்தார் ரஞ்சித். நான் ஸ்கேலை அவருக்கு ஞாபகமாகக் கொடுத்து செல்வதாக நினைத்து என் நினைவாக பாதுகாத்திருக்கிறார். கல்லூரி செலக் ஷன் லிஸ்டில் என் பெயரைத் தேடியிருக்கிறார். இல்லையென்றதும் அடுத்த ஆண்டும் தேடியுள்ளார். வேறொரு அனிதாவை நான் என நினைத்து ஓடிச்சென்று பார்த்து, நானில்லை என்றதும் சோர்ந்திருக்கிறார்.

ஆனால் நாங்கள் ஒரே கல்லூரிக்குள் வெவ்வேறு துறையில் நான் முதலாம் ஆண்டிலும், அவர் இரண்டாம் ஆண்டிலுமாக சில மாதங்களுக்குப் பிறகே பார்க்க நேர்ந்தது. பார்த்ததுமே அனிதா என ஆச்சரியத்தோடு அருகில் வந்தார். அப்போது எனக்கு அவர்பெயர் கூடத் தெரியாது. ஸ்கேல் கதையைப் பேசினார். கொஞ்சம் கொஞ்சமாக நட்பானோம்.எங்களுக்குள் பேச ஆர்ட் என்கிற விசயம் இருந்தது. முதல் வருடத்திலேயே எங்களுக்குள் பிடித்துவிட்டது. அவரைப் பற்றி நிறையப் பேசினார். தகுதி இருந்தும் முதல் அட்டெம்டில் எனக்கேன் இடம் கிடைக்கவில்லை என்கிற விசயம், ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருக்கிறது.

என் ஓவியங்களைப் பார்த்து நிறையவே இம்ப்ரெஸ் ஆனார். டெக்னிக்கலா எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். நான் அவரிடம் நிறைய பேசுவேன். அவர் அமைதியாகக் கவனிப்பார். கல்லூரியில் படிக்கும்போத அவர் நிறைய தெரு நாடகங்களை இயக்கி இருக்கார். அவரின் எழுத்துக்களை நான் மனப்பாடமாய் வைத்திருப்பேன். அவரது நாடகத்திலும் நடித்திருக்கிறேன். பி.எஃப்.எ முடிக்கும்போது ரஞ்சித் சினிமாவைத் தேர்வு செய்தார். எங்களுக்குள் புரிதல் துவங்கி நாங்க லவ் பண்ணி, புரொபஸ் பண்ணி, ஓகேன்னு சொல்லும்போதே இரண்டு பேருக்கும் ஒத்துப்போகாத கருத்து வேறுபாடும் வந்தது.

காதலை வெளிப்படுத்திய அன்றே எங்களுக்குள் பிரேக்கும் வந்தது. ஒருசில விசயங்கள் நமக்குள் ஒத்துப்போகலை நாம் நண்பர்களாகவே இருப்போம்னு  பிரிஞ்சுட்டோம். அன்றே கல்லூரி விடுமுறையும் வந்தது. எங்கள் சந்திப்பில் ஒரு இடைவெளி விழுந்தது. நானும் அவரின் முடிவை ஏற்று கடந்து போக முயற்சித்தேன். எங்கள் பிரிவு வருத்தத்துக்குறிய விசயமாக மாறியிருந்தது. எனது மனநிலையை மாற்ற முயற்சித்து தடுமாறிக் கொண்டிருந்தேன். ரஞ்சித்துக்கும் அதே நிலை. லேண்ட் லைனில் தொடர்புகொள்ள நிறைய முயற்சித்திருக்கிறார். விடுமுறை முடிந்து வந்ததும், நேராய் என்னிடம் வந்தார்.

உன் விருப்பம்போல் நீ இரு. என் விருப்பம் போல் நான் இருக்கேன். அதைத்தாண்டி நிறைய விசயங்கள் நமக்குள் ஒத்துப்போகுது. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றார். இன்றுவரை சமாளிக்கிறோம். எங்களுக்குள் காதல் இன்னும் உயிர்ப்போடு இருக்கு. அவர் அறிவுரையை அவர் சொல்வார். என் அறிவுரையை நான் சொல்வேன். ஒருத்தர் லைனை ஒருத்தர் கிராஸ் பண்றதில்லை. குறிக்கீடு இல்லாமல்அவரவர் பாதையில் பயணிக்கிறோம். தவிர எனக்கும் அவருக்கும் நிறைய விசயங்கள் ஒத்துப்போகும்.

ரஞ்சித்திடம் உங்களுக்கு பிடித்தது…

படிக்கும்போதே பொதுவான பிரச்சனைகளை நிறைய பேசுகிற பையனாக ரஞ்சித் இருந்தார். புத்திசாலித்தனமான புரிதலை அவரிடத்தில் எப்போதும் பார்க்க முடியும். தனிமனிதனாக எல்லாப் பிரச்சனையிலும் முன்னாடி நிற்பார். அதுதான் எனக்கு அவரிடம் ரொம்பவே பிடிக்கும். கல்லூரியில் எந்தப் பிரச்சனை என்றாலும் முன்னாடி ரஞ்சித்தை பார்க்க முடியும். சண்டை போடுவார். வயதுக்கேற்ற கோபம் அவரிடம் இருக்கும். அவரது சண்டையில் ஒரு அர்த்தம் இருக்கும். அதற்கான தீர்வு என்ன என்பதை புத்திசாலித்தனமாக யோசிப்பார். புரிதலோடு வேலை செய்வார்.

உங்கள் காதல் திருமணத்தில் இரு வீட்டார் நிலை…

2011ல் எங்கள் திருமணம். இருவர் குடும்பத்திலும் பெரிய எதிர்ப்பெல்லாம் இல்லை. எங்கள் படிப்பின் பின்னணி குறித்த புரிதல் என் பெற்றோருக்கு இருந்தது. நான் பி.எஃப்.எ. படிக்கும்போதே என் குடும்பத்திற்குள் ரஞ்சித்தை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தி இருந்தேன். என் வீட்டாரும் என் காதலை யூகம் செய்து விட்டார்கள். என்மீது என் பெற்றோருக்கு நிறையவே நம்பிக்கையும் இருந்தது.

ரஞ்சித்திடமும் பெரிய முரண்பாடு அவர்களுக்கு இல்லை. ரஞ்சித் குறித்தும், அவரின் குடும்ப பின்னணி குறித்து மட்டுமே என்னிடம் கேட்டார்கள். நான் என் கேரியரிலும் ஸ்ட்ராங்கா இருந்தேன். தொடர்ந்து எம்.எஃப்.எ படிக்கவும் பெற்றோர் அனுமதித்தார்கள். எல்லாவற்றையும் தாண்டி எங்கள் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ரஞ்சித் வீட்டிலும் பெரிய எதிர்ப்பில்லை.

ரஞ்சித்தின் பெற்றோர் இயல்பானவர்கள். எதுக்கும் நோ சொல்லவே மாட்டார்கள். ரஞ்சித்தின் அம்மா அவரது ஆளுமை நிறைந்த ஒரு பெண். அவரது செயல்கள் இயல்பாகவே முற்போக்குத்தனமாக இருக்கும். சரியெனப் பட்டதை பட்டென்று செய்பவர். மூன்று ஆண் பிள்ளைகளையும் வளர்த்ததில் அவரை ரொம்பவே பாராட்டனும். ஆண்பிள்ளை என்ற எந்த சலுகையும் கொடுக்காமல் சமையல் செய், பாத்திரம் கழுவு, வீட்டு வேலை செய் என எல்லாத்தையும் கத்துக் கொடுத்து வளர்த்திருக்காங்க.

கணவராக ரஞ்சித் குறித்து…

எங்களுக்குள்ளும் நிறைய வாக்கு வாதங்கள் வரும். நானும் காமன் இல்லை.அவரும் காமன் மேன் இல்லை. ரஞ்சித் தனி ஆளுமை. நான் தனி ஆளுமை. ஒரு விசயத்தில் எது சரி எது தப்பு என்பதை அந்தந்த தனிப்பட்ட மனிதர்கள்தான் முடிவு செய்து சூழலை பக்குவமாகக் கையாளனும். அவர் கருத்தை அவரும், என் கருத்தை நானும் சொல்வோம். விவாதம் இருக்கும்.

வாழ்க்கைய பாதிக்காமல் விட்டுக்கொடுத்துப் போவோம். எப்போதும் அன்பைத்தான் முன் வைப்போம். எங்களுக்குள் டிஸ்டப் ஆகுறதே இல்லை. என் உணர்வுகளை அவர் தொந்தரவு செய்யவே மாட்டார். குடும்பம்னா எல்லார் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் தரனும் இல்லையா? அந்தப் புரிதல் எங்களுக்குள் நிறையவே இருக்கு. திரைப்படம் தொடர்பாகவும், என்ன படம், என்ன கதை, நடிகர்கள் தேர்வு என எல்லாவற்றையும் என்னிடமும் பேசுவார்.

அனிதாவுக்கான அடையாளம்…

நான் எப்பவுமே ஒரு ஆர்டிஸ்ட். என் திறமை என்னைவிட்டு எங்கும் போகவில்லை. என் சூழலால் கொஞ்சம் இடைவெளி கொடுத்திருக்கிறேன். மகிழினி இப்போதுதான் பள்ளிக்குச் செல்லத் துவங்கி இருக்கிறாள். அவளுக்கான பாதுகாப்பான சூழல் இப்போதுதான் முழுமையாக உருவாகி இருக்கு. என் கேரியரை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கும் முயற்சியில்இருக்கிறேன்.

அனிதாவிடம் வெளிப்படும் தைரியம் குறித்து…

அம்மா வழித் தாத்தா சமுதாயச் சிந்தனை உடையவர். நிறைய சமத் துவம் பேசுபவர். அடக்கு முறை, சாதி பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடியவர். பெண்கள் தனித்துவமா இருக்கனும் என்று நினைப்பவர். அந்த தைரியம் என் அம்மாவுக்கும் இருந்தது. தன் பிள்ளைகளை பாதுகாத்து, நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்த பெண்ணா என் அம்மா சாதனைகள் செய்தவர்.

நானும் என் அம்மாவைப் பார்த்து அதே மாதிரி வளர்ந்தேன். நினைத்ததை செய்யும் சுதந்திரம் என் வீட்டில் இருந்தது. இயல்பா வளர்ந்தேன். பிடித்ததைச் செய்தேன். வீட்டிலும் டாமினேஷன் கேரக்டர் நான்தான். நான் படித்த கல்லூரியும் என் வாழ்க்கையில் பெரிய ரோல் பண்ணியிருக்கு. கல்லூரிக்குப் போனபிறகே நிறைய கற்றுக்கொண்டேன்.

ரஞ்சித் பதிவு செய்த சாதிப் பிரச்சனை, உடை அரசியல், நிலப் பிரச்சனை நீங்கள் படிக்கும் போதே தெரியுமா?

நான் சென்னையில் வளர்ந்ததால் நேரடியான பாதிப்பை உணரலை. திறமை இருந்தும் நான் கல்லூரிக்குள் நுழையும்போது ஏன் எனக்கு வாய்ப்பு கிடைக்கலை என்ற சாதிய அரசியல் புரியத் துவங்கியது. சாதி பிரச்சனை இருக்குன்னு தெரியும்.அது இந்த அளவுக்கு வீரியம்னு எனக்கு துவக்கத்தில் தெரியாது. ஆனால் என் தாத்தா,  இன்னொரு தாத்தா, அப்பா எல்லோரும் சாதிய பிரச்சனைகளை சந்திச்சிருக்காங்க.

நேரடியா பாதிக்கப்பட்டிருக்காங்க. திறமை இருக்கிற  மாணவனுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுது, உடன் படிக்கும் நண்பர்கள் ஊரில் என்ன நடக்குது என்றெல்லாம் புரியத் தொடங்கியது. எல்லா அரசியல் நகர்வுகளும் கல்லூரியில் படிக்கும்போதே புரிந்தது. கல்லூரியில் போராட்டங்களில் பங்கேற்றபோது நிறைய புரிதல்கள் வந்தது. பலபோராட்டங்களில் பெண்கள் சார்பாக நானே முன்னால் நின்றிருக்கிறேன்.

சமூகம் சார்ந்து ரஞ்சித் செலவு செய்வதில் உடன்பாடா…

அவரது செயல்பாட்டிற்கு நான் எப்போதுமே தடை சொல்லியதில்லை. அது அவரது பாதை. அவரின் விருப்பம். அவரது கேரியரில் அவர் பயணிக்கிறார். கலை மூலமாகத்தான் சமுதாயத்திற்குள் சமத்துவத்தை கொண்டுவர முடியும். அதுதான் அவரின் முன்னெடுப்பாகவும் இருக்கு. அதை நான் எப்பொழுதும் கேள்விக்கு உட்படுத்தவே மாட்டேன். ரஞ்சித்தின் செயல்பாடுகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நானும் அவரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. மேலும் துவக்கத்தில் இருந்தே நான் எளிமையான பொண்ணு. ஆடம்பரங்கள் எனக்கு பிடிக்காது.

கல்லூரிக் காலங்கள் எளிமையையும் சமத்துவத்தையும் எனக்கும் நிறையவே கற்றுத் தந்தது. கல்லூரியில் பார்த்த  திரைப்படங்கள் சிந்தனையைத் தூண்டியது. நெருடல்களை, வலிகளை உண்டு பண்ணியது. வாழ்க்கைக்கு எது முக்கியம்  எனப் புரிய வைத்தது. ஒரு சாதாரண பெண்ணாக பூ வைப்பது, நகை அணிவதில் எனக்கு உடன்பாடில்லை. நாங்கள் எப்படி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வளர்ந்தோமோ, அதே மாதிரி என் பெண்ணும் போராடி சாதிப்பாள். அவளுக்காக நிறைய சேர்த்து வைக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. தேவைக்கானது இருந்தால் போதும்.

ரஞ்சித் இந்தியில் படம் இயக்கப்போவது குறித்து…

சமூகம் சார்ந்த விசயங்களைத் தமிழ் இண்டஸ்டிரீ என்று மட்டும் இல்லை, எல்லா மீடியா இண்டஸ்டீரியிலும் பேச வேண்டிய தேவை இருக்கு. அதற்கான வாய்ப்பு இப்போது ரஞ்சித்துக்கு கிடைத்துள்ளது. பிர்சா முண்டா பற்றிய படம் பண்ணும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஓவியராக உங்கள் சிந்தனை…

ஓவியம் என்பது ஒரு மீடியம். நீ என்ன சொல்ல நினைக்கிறாய், என்ன சொல்ல வருகிறாய் என்பது முக்கியம். ஓவியத்தில் நான் என்ன சொல்கிறேன், இந்த சமுதாயத்திற்கு என்ன சொல்லப் போகிறேன் என்பதும் முக்கியம். எனது உள்ளுணர்வை நான் சொன்னால்தான் புரியும். ஆனால் சமுதாயப் பிரச்சனைகளை நீங்கள் பார்த்தாலே புரியும்.. என்னோட உளவியலில் சமுதாய சிக்கல் குறித்த உணர்வை, வலியை பிரதிபலிக்கிற மாதிரி, மனதில் தோன்றும் அந்த ஒரு நொடியை ஓவியத்தில் கொண்டு வருவேன்.

செமி ரியாலிஸ்டிக் ஓவியங்களையும் நான் சிறப்பாக வரைந்திருக்கிறேன். எனது கூந்தலை நான் எப்போதும் எனக்கான ஒரு பவராகப் பார்ப்பேன். எனது முடி பறக்கிற மாதிரியான நிறைய ஓவியங்களை வரைந்து வைத்துள்ளேன். என் நாய் கூட என்கூந்தலில் பறக்கிற மாதிரி ஓவியத்தை வரைந்திருக்கிறேன். என்னை நானே செல்ஃப் போர்ட்ராய்ட் செய்துள்ளேன். சிலர் ஓவியங்கள் மூலமாக இனவெறி குறித்துப் பேசி இருப்பார்கள். வரைவதில் நமக்குன்னு  தனி அடையாளத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம்

மகள் மகிழினி பற்றி..

எங்கள் காதலுக்கு கிடைத்த மிகப் பெரிய சர்ப்ரைஸ் அவள்.. எங்களின் ஆகச் சிறந்த மருந்து. அவள் கருவானபோதே புன்னகை தொடர்பான பெயராக இருக்க வேண்டும் என யோசித்து மகிழினி என்ற பெயரை முடிவு செய்தோம். மகளோடு நேரத்தை செலவழிப்பதை ரஞ்சித் ரொம்பவே விரும்புவார். அவளும் சூழலை சட்டுன்னு உள்வாங்குவாள். குழந்தைதனம் இருந்தாலும் ரொம்பவே புரிதலோடு நடந்து கொள்வாள். வரைவது அவளுக்கு இயல்பாவே இருக்கு. அவளுக்குன்னு தோணுவதை இப்போதே வரையத் தொடங்கியிருக்கிறாள்.

- மகேஸ்வரி

படங்கள் : ஆ.வின்சென்ட்பால்

Related Stories: