மியான்மரின் ஒட்டகச்சிவிங்கி பெண்கள்!

நன்றி குங்குமம் தோழி

மியான்மரில் வசித்து வந்த இந்தச் சமூகத்தினர், அங்கு நடந்த உள்நாட்டு போரின் போது, தப்பி பல இடங்களுக்கு குடிபெயர்ந்து, இறுதியில் தாய்லாந்தின் வடக்கு எல்லையில் குடில்கள் அமைத்து குடியேறினர். அவர்களின் மரபு படி, எந்த பெண்ணின் கழுத்து நீளமாக இருக்கிறதோ, அந்தப் பெண்ணே மிகவும் வசீகரமானவள் மற்றும் அழகானவள். கழுத்தின் நீளத்தை பொருத்து, பெண்ணின் அழகும் உயரும். இந்த வளையங்கள் தூங்கும் போதும் சரி உண்ணும் போதும் சரி, எப்போதும் கழுத்திலேயே இருக்கவேண்டும்.

முதலில் இது வலியுடன் கழுத்தில் காயங்கள் ஏற்படுத்தினாலும் காலப்போக்கில் பழகிவிடும் என்பதால் இந்த பழக்க வழக்கத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வந்தனர். சிறு வயதில் எலும்புகளை எளிமையாக கட்டுப்படுத்தி இணைக்க முடியும் என்பதால், ஐந்து வயது முதலே இந்த வளையங்களை அணிவிக்கும் சடங்கு தொடங்கப்படும். இது உண்மையில் கழுத்தை நீளமாக்குவதற்கு பதில் தோள்களையும் விலா எலும்பையும் அழுத்தி கழுத்தை நீளமாக காட்டும் ஒரு பிம்பம் தான். இருபது வயதிற்கு மேல் இருக்கும் பெண்கள் பத்து முதல் பதிமூன்று கிலோ வரை எடைக் கொண்ட வளையங்களை அணிந்திருப்பர்.

இதனால் கழுத்தில், தோள் பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கும். மேலும் எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும். பெண்பிள்ளைகள் வளர வளர இந்த வளையங்களின் எண்ணிக்கையும் கழுத்தில் அதிகரித்துக்கொண்டே போகும். முதலில் ஐந்து வளையங்களில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை கூடி, கடைசியில் 25 வளையங்கள் வரை கழுத்தில் அணியலாம். இதை ஒவ்வொரு முறை கழுத்தில் அணியும் போதும் அகற்றும் போதும் மிகுந்த வலி உண்டாகும். ஆனாலும், இந்தச் சடங்கை எதிர்நோக்கி பெண்கள் காத்துக்கொண்டு இருப்பது தான் அந்த பழங்குடியினரின் விசேஷம்.

காரணம், அப்போது தான் அவர்கள் அழகாய் இருப்பதாய் நம்புகிறார்கள். பெண்கள் தங்கள் கழுத்தை பார்ப்பது அந்தச் சில நிமிடங்கள் மட்டுமே என்பதாலும் அந்த சடங்கிற்காக மிகவும் எதிர்நோக்கி காத்திருப்பர். புலி தன் இரையை கழுத்தில் தான் பதம் பார்க்கும். காட்டில் வசித்து வரும் பழங்குடியினரான இவர்கள். பெண்களை புலிகளிடம் இருந்து பாதுகாக்க இந்த வளையங்கள் பயன்பட்டதாக ஒரு தரப்பு கூறுகின்றனர். எதிரி கூட்டத்தில் இருக்கும் ஆண்கள் தங்கள் பெண்களை அழகு என நினைக்கக் கூடாது என்பதற்காக இந்த முறை பயன்பாட்டில் வந்ததாக இன்னொரு தரப்பு விவாதிக்கின்றனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் பாரம்பரிய கட்டுப்பாட்டினால் இந்தக் கலாச்சாரத்தை பெண்கள் முறையாக பின்பற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இவர்களின் கழுத்தை பார்வையிட  நுழைவுக்கட்டணம் வசூலித்தும், ஆண்கள் உருவாக்கிய கைவினை பொருட்களை விற்றும் தங்கள் இனத்தின் பாரம்பரிய முறையினை தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த வளைவுகளை அணிவதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை என்றாலும், ஐந்து வயதிலேயே இந்த சடங்கு நடப்பதால், இந்த முடிவை பெற்றோர்களே எடுக்கின்றனர்.

மேலும் பெண்கள் வளர்ந்து பதினைந்து வயதில் வளையங்களை நீக்க முடிவு செய்தாலும், கழுத்துப்பகுதியால் தலையின் சுமையை தாங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தனர். அதனுடன் பல்வேறு உடல் உபாதைகளையும் சந்திக்க ஆரம்பித்தனர். சிலசமயம், பெண்களை தண்டிக்க நேரிட்டால், இந்தச் சமூகத்தின் தலைவர், அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் வளையங்களை அகற்றச் சொல்லி தண்டிப்பார். திடீர் என வளையங்களை அகற்றும் போது கழுத்து பகுதியால் தலையை தாங்கும் சக்தி இல்லாமல், பெண்கள் படுத்த படுக்கையாகி போவதும் உண்டு.

இவர்களைப் பற்றி தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு தெரிய வர ஆரம்பித்தவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இவர்களை பார்த்து வியந்து, மகிழ்ந்தனர் பலர். அதில் ஒரு சிலர் இவர்களின் நிலமையை எண்ணி வருந்தவும் செய்தனர். அதோடு நில்லாமல் எதிர்க்கவும் செய்தனர். மிருகக்காட்சி சாலைப் போல இது மனிதக்காட்சி சாலையாக மாறியிருப்பதாக குற்றம் சாட்டினர். கழுத்து வளையங்கள் அணிந்திருப்பதால் இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க முடியாது. வேலைகளுக்கும் போக முடியாத நிலை ஏற்பட்டது.

இப்போது நவீன கால மாற்றங்களால் அங்கு வசிக்கும் இளம் பெண்கள் நீண்ட கழுத்தை அழகாக நினைக்காமல் அதை அவர்கள் வாழ்வின் சங்கடமாகவே நினைக்க துவங்கியுள்ளனர். இவர்களின் சங்கடத்திற்கு அரசும் செவி சாய்த்துள்ளது. கழுத்தை செயற்கை முறையில் நீளவைப்பதால் இவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தப் பழக்கத்திற்கு தடை விதித்துள்ளது. மீறினால் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தங்களின் சங்கடத்திற்கு விடுதலை கிடைத்து விட்ட சந்தோஷத்தில் உள்ளனர் கையான் பழங்குடி பெண்கள்.

- ஸ்வேதா கண்ணன்

Related Stories: