‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம்; பாலிவுட் நடிகை மீது வழக்கு: அரியானா போலீஸ் நடவடிக்கை

கைதல்: ‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகை உள்ளிட்ட சிலர் மீது அரியானா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ரிச்சா சாதா நடத்த ‘மேடம் சீப் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. வருகிற 22ம் தேதி வெளியிடப்படவுள்ள இப்படத்தில், சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை அவமதிக்கப்பட்டுள்ளதாக ேபாலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரியானா மாநில பீம் சேனா அமைப்பின் கைதல் மாவட்டத் தலைவர் அசோக் தானியா, டிட்ரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘திரைப்பட நடிகை ரிச்சா சாதா, டிம்பிள்  கர்பண்டா, நடிகர் சந்தீப் சுக்லா, மனவ் கவுல், இயக்குனரும் எழுத்தாளருமான சுபாஷ் கபூர், திரைப்பட நிறுவனங்களின்  உரிமையாளர்கள் மற்றும் குழுவினர்கள் ‘மேடம் சீப் மினிஸ்டர்’ திரைப்படத்தில் வரும் காட்சிகள் மூலம் பட்டியல் சாதியினரையும், பழங்குடியினரையும் அவமதித்துள்ளனர்.

இது, இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது. இந்த திரைப்படத்தால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும். மேலும், ஆபாசத்தை பரப்பும் வகையிலும் உள்ளது. எனவே எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் மேற்கண்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிட்ரம் காவல் நிலைய போலீஸ் எஸ்ஐ மகாவீர் கூறுகையில், ‘மூத்த போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைபடி, குற்றம்சாட்டப்பட்ட நடிகை ரிச்சா சாதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து ரிச்சா சாதா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாங்கள் இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: