கழுகு வளர்க்கறீங்களா?

கழுகு வளர்ப்பு என்பது மெசபடோமிய நாகரிக காலத்திலிருந்தே தொடரும் ஒரு கலை. ஆங்கிலத்தில் இதனை ‘Falconary‘ என்பார்கள். மத்தியக் கிழக்கில் தொடங்கிய இந்தப் பாரம்பரியம்  இடைக்காலங்களில் ஐரோப்பா மற்றும் தெற்காசியப் பகுதிகளிலுமேகூட தீவிரமாக இருந்தது. அரசர்கள், போர் வீரர்கள், வேட்டைச் சமூகத்தினர் தங்கள் வேட்டைக்காகவும் கண்காணிப்புக்காகவும்,  பாதுகாப்புக்காகவுமேகூட கழுகுகளை வளர்த்தனர். கழுகு வளர்ப்பு என்று சொன்னாலும் இதில் பலவகையான கழுகுகள் ஏன் ஆந்தைகள்கூட பயன்படுத்தப்பட்டன.  குறிப்பாக, கோல்டன் ஈகிள் எனப்படும்  தங்கக் கழுகுகளுக்குத்தான் மிகவும் மவுசு. இந்தத் தங்கக் கழுகுகள் ஓநாய்கள், நரிகளைக்கூட வேட்டையாடித் தூக்கிவரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவை. வேட்டையாடவேண்டிய விலங்குகளை  துரத்திப் பிடிக்க இந்தக் கழுகுகளை வேகமாகப் பறக்கவிட்டு, குதிரையில் துரத்திப் போயோ, வேட்டை நாய்களை அனுப்பியோ வேட்டையாடுவது வழக்கம். இந்த கழுகு வளர்ப்பு இடைக்கால சமூகங்களில்  அரசர்கள் மற்றும் உயர்குடிகளின் கெளரவங்களில் ஒன்றாக இருந்ததால், கழுகுகளை வளர்ப்பதற்காக அதிகம் பிடிக்கிறார்கள் என்று இதற்கு இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் கடந்த  நூற்றாண்டில் தடைசெய்துள்ளன. ஆனால், ஆங்காங்கே ரகசியமாய் இவை வளர்க்கப்பட்டுதான் வருகின்றன. மத்திய இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இவை தடையை மீறி கள்ளத்தனமாக வளர்க்கப்படுகின்றன. சமயங்களில் ராணுவங்களில் உளவு வேலைகளுக்கும் இவை பயன்படுகின்றன. 1968ம் ஆண்டு சர்வதேச ஃபால்கனரி அமைப்பு எனப்படும் ஐஏஎஃப் உருவாக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட எழுபத்தைந்து கழுகு வளர்ப்பு சங்கங்கள் உள்ளன. உலகம் முழுதும் ஐம்பது நாடுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் உறுப்பினர்கள் இதில் உள்ளனர்.

Related Stories:

>