விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 26ம் தேதி விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது குறித்து டெல்லி போலீசார்தான் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் கடந்த வாரம் அமைத்தது.

இதற்கிடையே வேளாண் சட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டிராக்டர் பேரணியோ அல்லது வேறுவகையான போராட்டங்களோ நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி டெல்லி போலீஸ் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரி விவசாய சங்கம் தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘டெல்லியில் சட்டம் ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு விரோதமாக டெல்லியின் உள்ளே நுழைகிறார்கள். அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள்,‘‘சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது. அதனை அரசு தான் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வருகிற 26ம் தேதி அதாவது குடியரசு தினத்தன்று டெல்லியின் உள்ளே நுழைந்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனை அனுமதிப்பதோ அல்லது தடை செய்வதோ குறித்து டெல்லி போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என கூறி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

* பேரணி நடத்த உரிமை உண்டு

பாரதிய கிசான் சங்க பஞ்சாப் பொதுச் செயலாளர் பரம்ஜித் சிங் கூறுகையில், ‘‘அமைதியான முறையில் பேரணி நடத்த அரசியலமைப்பு ரீதியாக எங்களுக்கு உரிமை உண்டு. டெல்லிக்குள் நுழைய விடாமல் எங்களை தடுத்துள்ளனர். எனவே, அரசியலமைப்பு உரிமைப்படி, சட்டம் ஒழுங்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்தியே தீருவோம். டெல்லிக்குள் நாங்கள் நுழைவது நிச்சயம்’’ என்றார்.

* இன்று 10ம் கட்ட பேச்சு

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் 10ம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று பகல் 12 மணிக்கு நடக்க உள்ளது. 9 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முதல் முறையாக இன்று கூட உள்ளது. இக்கூட்டத்தில், அடுத்ததாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்க இருப்பதாக குழு உறுப்பினரான கன்வத் தெரிவித்துள்ளார். இவருடன் அசோக் குலாட்டி, பிரேமாத் குமார் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories:

>