தகவல் சட்டத்தில் தொடர்ந்து மனு போட்டதால் 5 வருசத்துக்கு கேள்வி கேட்க கூடாது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தடை

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், 5 ஆண்டுக்கு எந்த துறைக்கும் கேள்வி கேட்டு விண்ணப்பிக்க கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் மாநில சுகாதாரா துறை பணியாளராக பணியாற்றி வரும் தில்ஹாரி என்ற பெண், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த குடியிருப்பை பிரிவு-2 அதிகாரிக்கு மாநில அரசு ஒதுக்கியது. இதனால் தில்ஹாரியை அந்த குடியிருப்பில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் அந்த குடியிருப்பிலிருந்து காலி செய்ய மறுத்துவந்தார்.

காலி செய்வதற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காக தில்ஹாரி மற்றும் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகிய 3 பேரும் பல்வேறு துறைகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 21 விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர். இந்த குடும்பத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேவையற்ற கூடுதல் தகவல்களை பெறுவதை தடுக்கும் வகையில், குஜராத் மாநில தலைமை தகவல் ஆணையர் தாகூர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், தில்ஹாரி, அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் தகவல்அறியும் உரிமை சட்டத்தின்கீழ், எந்தவொரு தகவல் அலுவலரிடமும் 5 ஆண்டுகளுக்கு மனுதாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவல் சமயத்தில் அதிகாரிகளை தேைவயின்றி துன்புறுத்துவதற்காக மதிப்புமிக்க சட்டத்தை தில்ஹாரி குடும்பத்தினர் தவறாக பயன்படுத்துகின்றனர்’ என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய தகவல் சட்டத்தின்கீழ் மனுதாரருக்கு எதிராக தகவல் கோர தடை விதிக்கும் எந்தவொரு பிரிவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், குஜராத் மாநில தகவல் ஆணையரின் நடவடிக்கையை தகவல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: