யானைகளுக்கு கஷ்ட காலம்!

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ள தேசம் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாதான். இங்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் யானைகளுக்கு மேல் வசிக்கும் அடர்த்தியான காடுகள் உள்ளன. யானைகளை தந்ததங்களுக்காகவும், தோல் உள்ளிட்ட இன்னபிற வணிகத் தேவைகளுக்காகவும் கொலை செய்யும் தொழில்முறை யானைக் கொலைக்காரர்களும் போஸ்ட்வானாவில்தான் அதிகம். யானை வேட்டையாடும் இவர்களை வேட்டையாடுவதுதான் அரசுக்கு மிகப் பெரிய தலைவலி. இப்படியான சூழலில் போஸ்ட்வானாவின் யானைகள் திடீரென இறப்பது தொடர்

கதையாகியிருக்கிறது.

குறிப்பாக ஓகாவாங்கா என்ற டெல்டா பகுதியில் மட்டும் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் இறந்திருக்கிறதாம். இறக்கும் யானைகளை ஆய்வு செய்யும் வனத்துறையினர், மரணத்தின் காரணம் புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.இவை வேட்டைக்காரர்களால் கொல்லப்படவில்லை என்பது யானைகளை நோக்கும்போது தெளிவாகவே புரிகிறது. இறந்த யானைகளின் தந்தம் வெட்டப்படவில்லை. யானையின் உடலில் சயனைடு போன்ற விஷங்கள் எதுவுமில்லை. வெடிவைத்து உடல் பாகம் சிதைக்கப்படுவதில்லை. மேலும், வயது பாலின பாகுபாடின்றி பலதரப்பட்ட யானைகளும் இறக்கின்றன என்பதால் இது வேறு என்னவோ பிரச்சனை என்று கருதுகிறார்கள்.

இறந்து கிடக்கும் யானைகளில் சில தடுமாறி விழுந்தது போன்று தோற்றமளிக்கின்றன. ஒரு யானை சுற்றியபடியே நடந்து தள்ளாடி விழுந்து இறந்திருக்கிறது. இதனால் ஏதேனும் மூளை அல்லது நரம்பு மண்டலம் தொடர்பான நோய்த்தொற்று ஏதும் பரவிக்கொண்டிருக்குமோ என்று அஞ்சுகிறார்கள். உயிரோடு இருக்கும் யானைகளிலும் பல உடல் மெலிந்தும், சோர்வாகவும் காணப்படுகின்றனவாம். நடக்கவே இயலாமல் தள்ளாடித் திரிகின்றன என்கிறார்கள். மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். முடிவு வந்தால்தான் என்னாச்சு என்று தெரியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Related Stories: