கொரோனாவுக்குப் பிறகும் சினிமா வாழுமா?

வாழும்.2020-ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம். கொரோனா அரக்கனை தடுப்பூசிகள் மூலம் ஒழித்துவிடலாம் என்கிற நம்பிக்கையை அரசாங்கங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.கிட்டத்தட்ட எல்லோருமே புது வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம். கொரோனாவால் பல தொழில் சாம்ராஜ்யங்களின் கோட்டை தகர்ந்திருக்கிறது. மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமா.நம்மில் பலரும் எதிர்காலத்தில் சினிமாவே இருக்காது என்று நம்பத் தொடங்கிவிட்டோம்.எனினும் -சினிமா நம்முடைய பால்யத்தோடு தொடர்புடையது என்பதால், அதன் வீழ்ச்சியை நம்மால் எக்காலத்திலும் ஜீரணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.உலகளவில் எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் படுமோசமான வருவாய் வீழ்ச்சிக்கு சினிமா போயிருக்கிறது.தோராயமாக கடந்த ஆண்டு 100 ரூபாய் வருவாய் என்றால், 2020ல் வெறும் 29 ரூபாய்தான் கிடைத்திருக்கிறது. ஓராண்டிலேயே கிட்டத்தட்ட 70 சதவிகிதத்துக்கும் மேலான வருவாய் இழப்பு சினிமாத்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.படங்களின் தயாரிப்பு முற்றிலுமாக முடங்கிய நிலையில், ஏற்கனவே தயாரான படங்கள் வெளியான நிலையிலும் கொரோனா அச்சத்தின் காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் வராத நிலையே இன்றுவரை நீடிக்கிறது. ஓடிடியிலே படம் பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு பெரும்பாலானோர் வந்து விட்டார்கள்.

இருப்பினும் -

2021ஆம் ஆண்டு சினிமாவுக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று கணிக்கிறார்கள் நிபுணர்கள்.வருவாய் ரீதியாக மேலும் நாலாண்டுகள் போராட்டம் நீடிக்கக்கூடும் என்றாலும் கூட பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவம், பெரிய நட்சத்திரங்களின் படங்களை ரிலீஸ் ஆனதுமே பார்த்துவிட வேண்டும் என்கிற ரசிகவெறி சினிமாவைக் காப்பாற்றும் என்கிறார்கள்.

இதனால் சினிமாத்துறைக்கு பிரச்சினைகளே இருக்காது என்றில்லை. ஓடிடி தளங்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கப் போகின்றன.எனினும் -திரையரங்கத்துக்கு மக்களை அழைத்துவரக்கூடிய நூதனமான தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கம் உருவாகும் என்பதுதான் எதிர்பார்ப்பு.மவுனப்படங்களுக்கு மவுசு குறைந்தபோது பேசும் படங்கள் வந்தன.கறுப்பு வெள்ளை வெறுப்பை ஏற்படுத்தியபோது வண்ணத்திரை வந்தது.ஸ்டுடியோக்களில் முடங்கிய காட்சிகள், அவுட்டோருக்கு போய் மக்களுக்கு வெவ்வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தன.

சதுரமான திரை சலிப்பை ஏற்படுத்தியபோது அகலத்திரை ஈர்த்தது.

ஒலி, ஒளி துல்லியத்தை சினிமா வருடா வருடம் கூட்டிக்கொண்டே போகிறது.ஒவ்வொரு காலக்கட்டத்திலுமே சினிமா தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதால்தான் நூறாண்டுகளுக்கும் மேலாக மக்களை கவர்ந்திழுக்கும் மகத்தான பொழுதுபோக்காக சினிமா உயிர் வாழ்கிறது.சினிமா அரங்கங்கள் அடுத்த கட்டமாக சில மாற்றங்களை செய்யப் போகின்றன.உதாரணத்துக்கு ஒரு காட்சிக்கு கட்டணம் என்கிற நிலை மாறி, பத்திரிகை சந்தா மாதிரி மாதக்கட்டணம், ஆறு மாதக் கட்டணம், வருடக் கட்டணம் போன்ற சலுகைகளை ரசிகர்களுக்கு தரக்கூடிய நிலை வரப்போகிறது.இதன் மூலமாக தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச உறுதியான பார்வையாளர் வருகை, வருபவர்கள் மூலமாக பார்க்கிங் மற்றும் கேண்ட்டீன் போன்றவைகளால் வருமானம் என்று தன்னை சமாளித்துக் கொள்ளும்.விழாக்காலங்களில் துணிகள் வாங்க தள்ளுபடி மாதிரி, படங்களின் ரிலீஸின் போதும் டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்படும்.சினிமா அரங்கங்களில் சினிமா தவிர்த்து கிரிக்கெட் போட்டிகள், ஒலிம்பிக் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகள் பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.இம்மாதிரி புதிய வணிக நுணுக்கங்களை தியேட்டர்கள் யோசிக்கும்.

தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்துதல் என்கிற சினிமாத்துறையின் சங்கிலி செயல்பாட்டில் கொரோனாவுக்குப் பிறகு தயாரிப்பு, விநியோகம் வழக்கம்போல நடக்கும். காட்சிப்படுத்துதல் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமாளிப்பது தான் திரைத்துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.இதற்கு சினிமாத்துறையினரின் முயற்சி மட்டுமின்றி, அரசாங்கங்களின் அனுசரணையும் தேவை.

உடனடியாக அரசுகள் செய்ய வேண்டிய

உதவிகள் :

*ஜி.எஸ்.டி வரியின் சதவிகிதத்தைக் குறைப்பது.

*பொழுதுபோக்கு வரியை முற்றிலுமாக நீக்குவது.

*தியேட்டர்களுக்கு சொத்துவரி செலுத்த கால அவகாசம் மற்றும் வரிக்குறைப்பு.

*உத்தரவாதமாக கட்டவேண்டிய மின்கட்டணம் என்கிற கட்டுப்பாட்டை முற்றிலுமாக நீக்குவது.

*கொரோனா காலக்கட்டத்தில் செயல்படாமல் இருந்த தியேட்டர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்கின்றன. அவ்வாறு ஊதியம் வழங்கிய தியேட்டர்களுக்கு சிறப்பு மானியம்.

*வங்கிகளில் தியேட்டர்களுக்கு உத்தரவாதமான கடன் வசதி.கொரோனாவுக்கு முன்பாகவே கூடவே திரைத்துறை தள்ளாடிக் கொண்டுதான் இருந்தது. இருப்பினும், கொரோனா முற்றிலுமாக முடக்கிப் போட்டு விட்டது. இருந்தாலும், உலகம் இயல்புநிலைக்கு திரும்பும்போது சினிமாவும் தன் இயல்பை மீட்கும் என்றே பாசிட்டிவ்வாக நம்பலாம்.

Related Stories:

>