சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : அதிமுக எம்.எல்.ஏ. போர்க்கொடி

ஈரோடு:சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ., கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெருந்துறை தொகுதியில் சமீபகாலமாக பல குழப்பங்களை அமைச்சர் கருப்பணன் ஏற்படுத்தி வருகிறார். அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் முதல் பெருந்துறைக்கு வரவேண்டிய அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

கடந்த 9 ஆண்டு காலம் பெருந்துறை தொகுதியில் மக்கள் பணியாற்றி வருகின்றேன். ஜெயலலிதா இல்லை என்ற காரணத்தினால் மனம் போன போக்கில் அமைச்சர் கருப்பணன் கட்சியை சின்னாபின்னம் செய்து வருகிறார். மாவட்ட விற்பனை குழு தலைவர் தேர்தலை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்காமல், மூத்த அமைச்சர் செங்கோட்டையனிடமும் கலந்து பேசாமல், தன்னிச்சையாக தேர்தலை நிறுத்தியுள்ளார்.

ஈரோடு புறநகர் மாவட்டத்தில் 4 ஆண்டு காலத்தில் ஒரு நிர்வாகிகள் கூட்டத்தைகூட இதுவரை நடத்தவில்லை. கட்சியில் சேர்ந்து 5 ஆண்டுகள் ஆனால்தான் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை காற்றில் பறக்க விடுகிறார். கட்சிக்காக உழைப்பவர்களை அமைச்சர் கருப்பணன் மதிப்பதே இல்லை. கட்சியில் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்.

அமைச்சர் கருப்பணன் அவரது தொகுதியில் கவனம் செலுத்தாமல் பெருந்துறை தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகிற வகையில் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்து ெபருந்துறை தொகுதியில் நடந்து வரும் நேர்மையான நிர்வாகத்தை சீர்குலைத்து வருகிறார். கட்சி தலைமை உரிய விசாரணை நடத்தி அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

Related Stories: