ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மும்பை: கடந்த 2005 முதல் 2010 வரை மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதனால் வங்கிக்கு ₹25,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், 2019ம் ஆண்டில் முன்னாள் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் துணை முதல்வர் அஜித்பவார், அவரது மனைவி சுனேத்ரா பவார் மற்றும் அவர்களது உறவினர் ரோகித் பவார் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்ட கடனால் வங்கிக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுனேத்ரா பவார் உள்ளிட்டோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அஜித்பவார் பாஜ கூட்டணியில் இணைந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் ஆளும் கூட்டணி சார்பில் பாராமதி தொகுதியில் போட்டியிடும் சூழலில், இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் பாஜவின் வாஷிங் மெஷின் மீண்டும் வேலை செய்ய தொடங்கிவிட்டதாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

The post ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: