பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் பிறந்த நாளான இன்று அவரது சேவைகளை நினைவுகூர விரும்புகிறேன். திருச்சி மாவட்டம், விரகலூரில் பிறந்த இவர், பிற்காலங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்கிற பழங்குடியின மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர். கடந்த 2018ம் ஆண்டு பீமாகொரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக சிறையில் அடைக்கப் பட்டார்.

கடந்த 2021 ஜூலை 5ம்தேதி தமது 83வது வயதில் நீதிமன்ற ஆணையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்டேன் சுவாமியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூருவது மிகவும் பொருத்தமானது. இவரை போன்றவர்களின் வாழ்க்கை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உந்துசக்தியாக இருக்கும். இன்றைய மோடி ஆட்சியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம், பணபரிமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி கொடுமைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளான எண்ணற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஸ்டேன் சுவாமி முதன்மையானவராக கருதப்படுகிறார்.

The post பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: