நான்குவழிச்சாலை வடமலைக்குறிச்சி பிரிவில் 10 ஆண்டில் 67 விபத்து; 21 பேர் சாவு-சர்வீஸ் ரோடு அமைக்கப்படுமா?

விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலை வடமலைக்குறிச்சி பிரிவில் சர்வீஸ் ரோடு, நான்கு வழிச்சாலையை கடக்க பாலம் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளில் 67 விபத்துக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் காயமடைந்துள்ளனர்.மதுரை கன்னியாகுமரிக்கு விருதுநகர் வழி செல்லும் நான்கு வழிச்சாலையில் வடக்கு பகுதியில் புல்லாக்கோட்டை ரோடு துவங்கி வடலைக்குறிச்சி ரோடு, பாவாலி ரோடு வரையிலான ஒன்றரை கி.மீ தூரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை.

வடமலைக்குறிச்சி ரோட்டில் கலைஞர்நகர் மேட்டுத்தெரு, சின்னமூப்பன்பட்டி, பாப்பாகுடி, நந்திரெட்டியபட்டி, வடமலைக்குறிச்சி கிராமங்கள் உள்ளன. பாவாலி ரோட்டில் காமாட்சி நகர், சங்கரநாராயணபுரம், பாவாலி, சந்திரகிரிபுரம், அழகாபுரி ரோடு செல்கிறது.சர்வீஸ் ரோடு இல்லாததால் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நான்குவழி தடுப்புகளை தாண்டி குறுக்கே நடந்து செல்கின்றனர். புல்லாக்கோட்டை ரோடு சந்திப்பில் தரைப்பாலம், மேம்பாலம் இல்லாததால் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது.

நான்குவழிச்சாலை அமைப்பதற்கு முன்பாக 1999 முதல் 2009 வரையிலான 10 ஆண்டுகளில் 43 விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்து, 34 பேர் படுகாயம் அடைந்தனர். நான்குவழிச்சாலை அமைத்த பிறகு 2009 முதல் 2020 வரை 67 விபத்துகளில் 21 பேர் உயிரிழந்து, 56 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வடமலைக்குறிச்சி ரோடு பிரிவில் சர்வீஸ் ரோடு, தரைப்பாலம் அமைக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியும், பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியும் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை.

சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணசாமி கூறுகையில், வடமலைக்குறிச்சி பிரிவில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநருக்கு தொடர் கடிதம் எழுதி வருகிறோம். திட்ட இயக்குனரும் ஆய்வு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

புறவழிச்சாலையாக இருந்த பொது நடந்த விபத்துக்களை விட நான்கு வழிச்சாலையாக மாற்றிய பிறகு விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. விபத்துக்கள் உயிரிழப்புகளை தடுக்க சர்வீஸ் ரோடு, பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: