ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பு..! தமிழக ரேஷன் கடைகளில் விநியோகம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர் திராட்சை , முழு நீள கரும்பு மற்றும் துணிப்பை ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக வீடு வீடாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில், பயனாளர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பெற வருவோர், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. திருவாரூர் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

Related Stories: