சக்கரத்தான்மடை கிராமத்தில் குடிநீர், கால்வாய் வசதியின்றி அவதிக்குள்ளாகும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த சக்கரத்தான்மடை கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்டராம்பட்டு அடுத்த தலையாம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட சக்கரத்தான்மடை கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக 5 மினி டேங்குகள், ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு மினிடேங்க் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. 4 மினி டேங்குகள் மின்மோட்டார் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

அதேபோல், கிராமத்தில் கழிவறை வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. சுகாதார சீர்கேட்டில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அங்குள்ள மாரியம்மன் கோயில் தெரு, பள்ளிக்கூட தெரு, மேட்டுத்தெருக்களில் கால்வாய் இருந்தும் முறையாக தூர்வாரப்படாததால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும், கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: