கொள்ளையடித்த பணத்தில் பொங்கல் பரிசு என்பதா? விவசாயிகளுக்கு ₹6,000 உதவி தொகை எதிலிருந்து எடுத்து கொடுக்கிறார்கள்?: பாஜவுடன் அதிமுக அமைச்சர் நேரடி மோதல்

விழுப்புரம்: கொள்ளையடித்த பணத்தில் பொங்கல் பரிசு தொகையை அதிமுக கொடுக்கிறது என்றால்,  விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகையை எதிலிருந்து  எடுத்துக் கொடுக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி சண்முகம் கேள்வி எழுப்பினார்.

 தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், விழுப்புரத்தில் நேற்று அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் மீது 98 பக்க ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். இது புதிதாக சொல்லப்பட்ட புகார் அல்ல. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போதிலிருந்தே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில், ஒப்பந்தத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.   பாரத் நெட்டில் ரூ.1950 கோடி ஊழல் என்கிறார்கள். நடக்காத டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும். அது குளோபல் டெண்டர். அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.  எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப தயாராக இல்லை, என்றார்.

இதே போன்று ஆளுனரிடம் பாமகவும் ஊழல் புகார் கொடுத்ததே?

அமைச்சர்: யார் வேண்டுமானாலும் புகார்  சொல்லலாம். ஆனால் புகாரில் முகாந்திரம் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொங்கலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக அறிவித்தது கொள்ளையடித்த பணத்தில் இருந்து கொடுப்பதாக பாஜக துணை தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?

அமைச்சர்: மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை கொடுப்பது எதிலிருந்து கொடுக்கப்பட்டதாம்?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: