குண்டல் அணையை சுற்றி புனரமைக்கப்படாத பூங்கா: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சாம்ராஜ்நகர்: கொள்ளேகாலில் அமைந்துள்ள குண்டல் அணையை சுற்றி அமைக்கப்பட்ட பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல் இழந்து காணப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.  சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் அமைந்துள்ளது குண்டல் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டை சுற்றி 2019ம் ஆண்டு 80 லட்சம் செலவில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக அணைக்கட்டு மாறியது. நாட்கள் செல்ல செல்ல அதை புனரமைப்பதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக செடி, கொடிகள், மரங்கள் மற்றும் இருக்கைகள், தடுப்பு வேலிகள், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல் போன்ற பிற பொழுது போக்கு அம்சங்கள், முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் குண்டல் அணைக்கட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இடமாக மாற்றப்பட்டுள்ளது.

பல முறை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து தோட்டக்கலைதுறைக்கும் , சுற்றுலா துறைக்கும் புகார் அளித்துவிட்டனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து குண்டல் அணைக்கட்டு உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது,  இங்கு பணியாற்றி வந்த இன்ஜினியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டது. புதிய இன்ஜினியர் இன்னும் நியமிக்கப்படவில்லை. மேலும் கொரோனா காலக்கட்டம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகையில்லாமல் இருந்ததால் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதற்கு காரணம் சுற்றுலா துறை சார்பில் முறையாக எந்தவிதமான நிதியும் வரவில்லை.  பூங்காவை பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், மட்டுமே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: