திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் தீவிரம்; நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை

களக்காடு: திருக்குறுங்குடி பகுதியில் பிசான பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. அதேநேரத்தில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருக்குறுங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான மலையடிப்புதூர், மாவடி, ரோஸ்மியாபுரம், டோனாவூர், செட்டிமேடு, என்.டி.பட்டயம், ஆவாரந்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். ஐ.ஆர்.20, அதிசய பொன்னி, அம்பை 16  உள்ளிட்ட நெல் ரகங்கள் இப்பகுதிகளில்  பயிரிடபட்டுள்ளது.

சுற்று வட்டாரப் பகுதிகளில்  உள்ள பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள்  விவசாயப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். பயிர்கள் பொதி பட்டத்தில் உள்ளது. தற்போது டிசம்பர் முதல் வாரத்திலிருந்து திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதிகளில்  காலையில் நல்ல வெயில்  மதியத்துக்கு பின்னர் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை, இரவு, அதிகாலையில் பனி என சீதோஷ்ண நிலையானது. திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் முற்றிலுமாக மாறியுள்ளது. கடந்த 3 நாள்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால்  பயிர்களில் நோயின் தாக்கம் உள்ளது. ஒரு பத்து காட்டில் 1 வயலில் நோய் தாக்கமிருந்தால் அது அப்படியே அடுத்தடுத்த வயல்களுக்கும் தொற்று நோய் போல் பரவி விடுகிறது. நோயின் தாக்கத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்து அடிக்கின்றனர்.

வெயில், மழை, பனி என இருப்பதால் பயிர்களை நோய் தாக்குவதாக விவசாயிகள் கூறுகின்றனர். பெரியகுளம், நம்பியாறு, ஆற்று கால்வாய்களில் தண்ணீர் உள்ளதால் கதிர் வருகிற வரையிலும் விவசாய தேவைக்கான தண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். வாழை, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு வேளாண் துறை அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: