மறைந்த பேராசிரியர் அன்பழகனின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த பேராசிரியர் அன்பழகனின் ஒவ்வொரு பிறந்த நாளும் மாணவ-மாணவிகளுக்கு  பயன்படக்கூடிய வகையில் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவாக நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழனின் 98வது பிறந்தநாளையொட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அவரது உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து, சென்னையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி பேசியதாவது: பேராசிரியர் அன்பழகனுக்கு 98வது பிறந்தநாள். ஆனால் அவர் இன்றைக்கு நம்முடன் இல்லை. பேராசிரியரை பொறுத்தவரையில் எனக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். என்ன ஏமாற்றம் என்று கேட்டால், கலைஞர் 95 ஆண்டு காலம் வாழ்ந்து இருக்கிறார். பெரியார் 94 வருட காலம் வாழ்ந்திருக்கிறார். பேராசிரியர் 97 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்.

ஆனால் எனக்கு இருந்த குறை, வருத்தம் என்னவென்று கேட்டால், இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் அவர் வாழ்ந்திருக்க கூடாதா, வாழ்ந்திருந்தால் 100 ஆண்டுக்காலம் வாழ்ந்த திராவிட தலைவராக விளங்கிக் கொண்டிருப்பார் என்பதுதான்.

நமது அன்புச்செல்வன் அருகில் உட்கார்ந்து இருந்தபோது, “ஒரு மகனாக இருந்து நான் அவரை கவனித்ததை விட நீங்கள் தான் அவரை அதிகமாக கவனித்தீர்கள்” என்று என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். நான் அவரையும் என்னையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் அவரை பெரியப்பா என்றுதான் சொல்லி இருக்கிறேன். பெரியப்பா என்று சொல்லிக் கொண்டிருந்த நான் கலைஞர் மறைவிற்கு பிறகு, நான் பேராசிரியரை அப்பாவாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் உண்மை. ஆனால் அவர் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் அது ஒரு கட்சி பிரச்னையோ, குடும்ப பிரச்னையோ ‘பேராசிரியர் இடத்தில் சொல்லு’ என்று கலைஞர் சொல்வார். உடனே பேராசிரியர் இடத்தில் சென்று சொன்னால்  ‘இது கலைஞருக்கு தெரியுமா’ என்று கேட்பார். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது இருவருக்கும். அந்த அளவுக்கு நம்பிக்கைக்குரிய, நட்பிற்கு உரிய மனிதராக பேராசிரியர் விளங்கினார்.

தன்னுடைய மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். எதை பற்றியும் கவலைப்பட மாட்டார். அவரிடத்தில் நான் எத்தனையோ படிப்பினைகளை கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக அன்புச்செல்வனும், வெற்றியும் அறிவாலயத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர்களிடத்தில் நான் ஒன்றை சுட்டிக் காட்டினேன். அலுவலகத்தில் பேராசிரியர் இருக்கும் பொழுது கட்சி நிர்வாகிகள் யாராவது வந்தால், மரியாதை கொடுக்கும் விதமாக யாரும் உட்கார மாட்டார்கள். உட்காருங்கள் என்று பேராசிரியர் சொல்வார். அதற்கு அவர்கள் நாங்கள் நிற்கிறோம் என்று சொல்வார்கள். அதற்கு அவர் நாற்காலி எதற்கு போடப்பட்டுள்ளது, உட்காருங்கள் என்று சொல்வார். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் பேராசிரியர்.  யாராக இருந்தாலும் சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தவர் பேராசிரியர்.கலைஞரின் பிறந்த நாள் விழாவில் பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார். ‘முதலில் நான் மனிதன், 2வது நான் தமிழன், மூன்றாவது நான் அன்பழகன், நான்காவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன்’ என்று சொல்வார்.

அப்படித்தான் வாழ்ந்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார். அவர் சட்டமன்றத்திலே உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஏன் மேலவையில் உறுப்பினராக, நான்கு முறை அமைச்சர் பதவி ஏற்று கல்வித்துறை அமைச்சராக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக, நிதித்துறை அமைச்சராக, கழகத்தின் பொதுச்செயலாளராக 40 ஆண்டுகாலம் இருந்திருக்கிறார். இங்கே நான் ஒரு செய்தியை சொல்லி ஆகவேண்டும். தலைமை கழகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று கலைஞர் முடிவு செய்தார். அப்பொழுது ஒரு பிரச்னை வந்தபோது, கலைஞர், பேராசிரியர் இடத்தில் கேட்டார். அப்பொழுது, கட்சியில் நான் துணை பொதுச்செயலாளராக இருந்தேன். பொருளாளராக என்னை நியமிக்க கலைஞர், பேராசிரியரிடம் அனுமதி கேட்டார். ‘இதெல்லாம் என்னிடத்தில் கேட்க வேண்டுமா? நீங்கள் முதலமைச்சராக, துணை முதலமைச்சராக வேண்டுமானாலும் ஆக்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் எடுக்கும் முடிவு எனது முடிவாகும்’ என்று சொன்னார். இவ்வாறு எதையும் வெளிப்படையாக பேசி நமக்கு வழிகாட்டியாக இருந்தவர். எனவே, அவரது பிறந்த நாள் அவர் விரும்பியபடி கல்வி கற்கக் கூடிய மாணவ செல்வங்களுக்கு பயன்படக்கூடிய வகையில், கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவாக நடைபெறுகிறது. இது அவரது ஒவ்வொரு பிறந்த நாள் விழா நிகழ்ச்சியிலும் நிச்சயமாக நடக்கும், நடக்க வேண்டும். இவ்வாறுஅவர் பேசினார்.

Related Stories: