டாக்டரும் சினிமா தயாரிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஆந்திர உணவோ, சினிமாவோ கொஞ்சம் காரசாரமாக இருந்தால்தான் சுவையே. டோலிவுட் படங்கள் என்றாலே மிகைப் படுத்திய சத்தம், எதிரியை தும்சம் செய்யும் சண்டை காட்சிகள், இதன் நடுவே கலர்ஃபுல் பாடல்கள் என்று ஒரு முத்திரை உள்ளது. அதைத்தான் பார்வையாளர்களும் விரும்பினாங்க. ஆனா பார்வையாளர்கள் மனதில் ஒரு குறிஞ்சி பூ பூக்க செய்ய முடியும் என்பதை C/O கஞ்சரபாலம் படம் நிரூபித்துள்ளது. சண்டை காட்சிகள், பாடல்கள் என இயங்கிக் கொண்டி இருந்த தெலுங்கு சினிமா உலகில் திடீரென்று இந்த படம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தான் அதற்கான பிள்ளையார் சுழியை போட்டார். மீடியாக்களை அழைத்து தெலுங்கு மக்கள் தவிர்க்க கூடாத சினிமா என்றார். பாகுபலி வில்லன் ராணாவோ ஒரு படி மேலே போய் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறேன் என்கிறார். ஒட்டு மொத்த தெலுங்கு சினிமாவும் இப்போது இந்தப் படத்தை கொண்டாடுகிறது. அதி தீவிர உணர்வுகளுடன் பயணித்து யதார்த்த காதலை மனிதத்தன்மையுடன் விவரிக்கிறது படத்தின் திரைக்கதை. படத்தின் தயாரிப்பாளர் பிரவீணா பருச்சூரி. இவர் அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்தவர். அங்கு புகழ் பெற்ற கார்டியாலஜிஸ்ட்.  

படத்தின் கதை இதுதான். நான்கு காதல்களின் சாட்சியாக இருக்கிற ஒரு சிறு நகரம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ‘கஞ்சரபாலம்’. பள்ளி மாணவன் சுந்தரம், உடன் படிக்கும் சுனிதாவை  நேசிக்கிறான். பார்கவி என்ற பிராமணப் பெண்ணுக்கும், அடியாளாக இருக்கும் ஜோசப்புக்கும் காதல். ஒயின் ஷாப்பில் பணிபுரியும், கத்தனுக்கு  தினமும் கடையில் குடிக்க சாராயம் பெற்றுச் செல்லும் சலீமா என்ற பாலியல் தொழிலாளி மீது காதல். அரசு அலுவலகம் ஒன்றில் அட்டெண்டராக இருக்கும் 49 வயது, திருமணமாகாத ராஜுவுக்கும், அதே அலுவலகத்தில் உயர் அதிகாரியான கைம்பெண் ப்ரணீதாவுக்கும் காதல்.

சாதி, மதம், வர்க்கம், தொழில் ஏற்றத்தாழ்வு என சகட்டு தனமாக அனைத்தையும் யோசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன. வழக்கமாக இப்படியான படங்களில் கருத்துக்களை திணிப்பார்கள். அப்படி எந்த முயற்சியையும் இயக்குனர் செய்யவில்லை. மாறாக யோசிக்க வைக்கிறார். மனிதத்தை நேசிக்க கற்றுத் தருகிறார். இந்த நான்கு காதல்களும் ஒரு புள்ளியில் இணைகிறது. அந்தப் புள்ளி ஏற்படுத்தும் தாக்கம்தான் கஞ்சரபாலம். பார்வையாளர்கள் படத்தின் இறுதிக்காட்சியில் இருந்து மீள நிச்சயம் சில மணி நேரங்கள் தேவைப்படும் அரங்கமே அந்தத் திருப்பத்தை ஆர்ப்பரிக்கிறது.

காரணம், அத்தனை தெளிவான திரைக்கதை. குறிப்பாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஒரு பெண். தினமும் ஊசி, நோயாளிகள் என்று பார்த்தவர். சினிமாவின் வாசமே இல்லாதவர். 90களில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் பிரவீணாவின் குடும்பம் ஒன்று. பிறந்து வளர்ந்து, டாக்டருக்கு படித்தது எல்லாம் அமெரிக்காவில். இப்போது நியூயார்க்கில் புகழ் பெற்ற மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். ‘‘சின்ன வயசில் ஒவ்வொரு வாரம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்தியன் டிபார்ட் மெண்டல் ஸ்டோருக்கு அப்பாவுடன் போவது வழக்கம்.

எங்கு பார்த்தாலும் ஆங்கிலம், வெள்ளைக்காரங்க. நான் படிச்ச பள்ளியிலும் எல்லாருமே வெள்ளைக்காரங்க தான். எங்க திரும்பினாலும் ஆங்கில வாசனை தான் வீசும். இன்றைய காலக்கட்டத்தில் நிறைய இந்தியர்கள் அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாங்க. ஆனா 90களில் ஒரு சிலரேதான் இருப்பாங்க. அவங்களும் நமக்கு பக்கத்தில் இருக்க மாட்டாங்க. அதனால் நம்ம மொழியை கேட்கணும்னா அதற்கு ஒரே வழி சினிமாதான். கடைக்கு போகும் போது எல்லாம் அப்பாகிட்ட சொல்லி தெலுங்கு பட வி.சி.டிக்களை வாங்கிடுவேன். படிப்பு, விளையாட்டு போக கிடைக்கும் நேரத்தில் சினிமா பார்ப்பது தான் என்னோட பொழுது போக்கே’’ என்ற பிரவீணாவுக்கு சினிமா மேல் ஆர்வம் ஏற்பட இந்த படங்கள் தான் காரணமாம்.

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு சினிமா சார்ந்து மேற்படிப்பு படிக்க போவதாக தனது அம்மாவிடம் கூறியுள்ளார் பிரவீணா. அம்மாவோ ‘நல்ல மார்க் எடுத்து இருக்க. சினிமா எல்லாம் வேணாம். அதுவும் பொம்பள பசங்களுக்கு சினிமா சரிப்பட்டு வராது. முதல்ல டாக்டருக்கு படி. அப்புறம் யோசிக்கலாம்’ன்னு சினிமாவுக்கு அப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரவீணாவும் டாக்டருக்கு படித்து இதயநோய் நிபுணராக தன்னுடைய வாழ்க்கை பாதையை துவங்கியுள்ளார். பத்து ஆண்டுகளாக இதய நிபுணராக பணிபுரிந்துள்ளார். என்னதான் டாக்டராக மாறினாலும் சின்ன வயசு ஆசை நம்முடைய மனசில் ஆழமாக பதிந்து இருக்கும்.

அது அழியவே அழியாது. என்றாவது ஒரு நாள் அது வெளியே வரும். அப்படித்தான் பிரவீணாவின் சினிமா ஆசையும் ஒரு நாள் திடீரென்று வெளிவந்தது. “சினிமாவுல நடிக்க முடியாது, ஆனா தயாரிக்கலாமே’’ என்று தனக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டவர் உடனடியாக மனசு மாறுவதற்குள் ஃப்ளைட்டை பிடித்து ஐதராபாத்துக்கு பறந்துள்ளார். அங்கு நண்பர் ஒருவர் மூலமாக படத்தின் இயக்குனர் வெங்கடேஷின் அறிமுகம் பிரவீணாவுக்கு ஏற்பட்டது. “வெங்கடேஷ் என்னிடம் கஞ்சரபாலம் கதை சொன்ன போது, சினிமாவை மறந்து நிஜ வாழ்க்கையில் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

ஒவ்வொரு காதல் கதையும் மதத்தை தாண்டி மனிதநேயத்தை நோக்கி பயணம் செய்வது போல் திரைக்கதை எழுதப்பட்டிருந்தது. கஞ்சரபாலம் என்ற ஊர் மக்களின் வாழ்வியலை பதிவு செய்திருந்தது. ஒவ்வொரு வசனங்களும் நம் ஆழ்மனதில் ஊடுருவி செல்கின்றன. என்னிடம் எப்படி திரைக்கதையை விவரித்தாரோ அப்படியே அதை படமாக கண் முன் நிறுத்தினார் இயக்குனர் வெங்கடேஷ்’’ என்றார் பிரவீணா. இந்த படத்தை கஞ்சரபாலம் கிராமத்திலேயே ஷூட் செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படத்தில் நடித்து இருக்கும் அனைத்து முக்கிய கதாப்பாத்திரங்களும் அதே ஊரை சேர்ந்தவர்கள் தான்.

பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் சலீமாவைத் தவிர மற்ற அனைவருமே அந்தக் கிராமத்து மனிதர்கள். படத்தின் தயாரிப்பாளரான பிரவீணாவும் இதில் முக்கிய வேடமிட்டு நடித்துள்ளார். “யாருமே தொழில் முறை நடிகர்கள் இல்லை. பாலியல் தொழிலாளியாவும் அதே நேரம் ஒயின் ஷாப்பில் மது வாங்குற மாதிரி காட்சிகள் அதிகம் படத்தில் உள்ளது. இந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க பலர் தயங்கினாங்க. யோசிச்சேன் நாமளே செய்தா என்னன்னு தோணுச்சு.

இயக்குநரிடம் என் விருப்பத்தை சொல்ல, அவரும் கிரீன் சிக்னல் காட்டினார்’’ என்றார் பிரவீணா. நியூயார்க்  திரைப்படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெலுங்குப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.  பெண்கள் எல்லா துறைகளில் பயணித்தாலும், சினிமாவில் அதுவும் தயாரிப்பு என்பது சிக்கலான ஒன்று. கனவு போல இயங்கும் தொழில். வெற்றியோ தோல்வியோ பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பிரவீணா தெலுங்கு திரையுலகில் ஒரு மாற்று சினிமா தந்ததுடன் மற்ற பெண்களுக்கும் துணிச்சலை தந்துள்ளார்.

- திலீபன் புகழ்

Related Stories: