பெண்களுக்கான இரவு நேரக் காப்பகம்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

வாய்ப்புகள் அனைத்தும் சென்னையில் மட்டுமே குவிந்து கிடப்பதால், சென்னையில் வசிக்கும் பெண்கள் மட்டும்தான் வாய்ப்புகளை பெற முடிகிறது. வாய்ப்பே கிடைக்காத பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பெண்களின் நிலை? ‘சொசைட்டி ஃபார் ஆல் வுமன் டிஸபிளிட்டி அசோசியேஷன்’ என்ற அமைப்பினை தொடங்கி நடத்தி வரும் டாக்டர் ஐஸ்வர்யா ராவ் குழந்தைகள் நல மருத்துவராகவும், குழந்தைகள் எச்.ஐ.வி தொடர்பாகவும் பணியாற்றியவர். அசோசியேஷனின் ஒரு அங்கமாய், இரவு விடுதி எனும் பிரிவில், பெண்களுக்கான இரவுநேரக் காப்பகத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் 2016ல் இருந்து நடத்தி வருகிறார்.

‘‘குறுகியகால தங்கும் விடுதியாக (Short stay hostel) அறியப்படும் இந்த விடுதியில், பெண்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசம். இங்கு வந்து தங்கும்போது, பெண்களுக்கு பாதுகாப்பும் நிம்மதியும் கிடைக்கிறது. பெண்கள் பொருளாதாரத் தன்நிறைவோடு வேலை கிடைத்ததும் கிளம்பிவிடுவார்கள். அதுவரை அவர்களுக்கான  பாதுகாப்பை நாங்கள் தருகிறோம்’’ என்றார்.‘ஆதரவற்ற பெண்கள், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள், சட்டென எடுத்த முடிவால் வீட்டிலிருந்து கிளம்பி செல்லுமிடம் தெரியாமல் ரயில்,

பேருந்து நிலையங்களில் சுற்றித் திரியும் பெண்கள், வாழ்க்கையில் எதையாவது சாதிக்க நினைத்து குடும்பத்தினரால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்கள், வீட்டுப் பிரச்சனையில் மனநிலை பாதிப்படைந்த நிலையில் வரும் பெண்கள், மாற்றுத் திறனாளர் இவர்கள்தான் எங்களின் இலக்கு. பெரும்பாலும் இளம் பெண்கள் இங்கு நிறையவே வருகிறார்கள். வீட்டைவிட்டு வந்த பெண்களைப் பார்த்தால் காவலர்களே இங்கு கொண்டு வந்து பாதுகாப்பாய் சேர்க்கிறார்கள். பெற்றோரிடத்தில் கோபத்தில் கிளம்பிவரும் பெண்களை, பெற்றோர்கள் நாளிதழில் விளம்பரம் கொடுத்து, காவல் நிலையம் மூலம் அறிந்து, அவர்களே எங்கள் விடுதிக்கு வந்து அழைத்துச் செல்கிறார்கள்.

தெரிந்தவர்கள் மூலம் சென்னை வரும் சில பெண்கள், படிக்க, வேலைக்கான பயிற்சி எடுக்க, விளையாட்டில் பயிற்சி பெற, வேலை கிடைக்கும்வரை தங்குவதற்கு, திருமணம் செய்து கொள்வதற்கென பாதுகாப்புக் கருதி, சிறிது காலம் இங்கு தங்கிச் செல்ல வருகிறார்கள். அவர்கள் எதிர் பார்த்தது நிறைவேறியதும், விடுதியை காலி செய்து விடுவார்கள். பெரும்பாலும்  மாற்றுத் திறனாளிப் பெண்கள் வார இறுதியில் விளையாட்டில் பயிற்சி எடுக்க இங்கு வந்து தங்குகிறார்கள். இங்கே சிரிப்பு, சந்தோஷம், அமர்க் களம், சண்டை, கூடல், பிரிவு எல்லாமும் உண்டு.

எங்கள் விடுதிக்கு வந்த பிறகு ஒருவருக்கு ஒருவர் உதவி, முன்னேற்றம், நிறைய வெளித் தொடர்புகள் எல்லா மும் கிடைக்கிறது. எங்களால் முடிந்த வரை இங்கு வந்து தங்கும் பெண்களுக்கு உதவி செய்கிறோம். இதுவரை 55 பெண்கள் வரை வேலை வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். 8 பெண்களுக்கு நாங்களே திருமணம் செய்து வைத்திருக்கிறோம். 6 பெண்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மாற்றுத் திறனாளர் பெண்களுக்கு பைக் மற்றும் வீல் சேர் வாங்கிக் கொடுக்கிறோம். தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்தும் பெண்கள் அதிகம் வருகிறார்கள்.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, நிறையப் பெண்கள் இந்த விடுதியில் தங்கியிருந்து பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் மாற்றுத் திறனாளர், விழி குறைபாடுடைய பெண்கள் அதிகம் வந்து தங்கிச் செல்கின்றனர். வாழ்க்கையில் முன்னேறவும், ஜெயிக்கவும் நினைக்கும் பெண்களுக்கு ஆலோசனை, வழிக்காட்டல், வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல், விளையாட்டில் முன்னேற வைத்தல் அவ்வளவே எங்கள் நோக்கம். அதுவரை பாதுகாப்பாய் தற்காலிகமாய் தங்க இது ஒரு ஷாட் ஸ்டே ஹோம்’’   என முடித்தார் டாக்டர் ஐஸ்வர்யா ராவ்.

- மகேஸ்வரி

Related Stories: