நன்றி குங்குமம் தோழி
*மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியை போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.
*சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.
*மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும்
வீணாகாது.
– ம.வசந்தி, விழுப்புரம்.
*தோசைக்கு மாவு அரைக்கும் போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக இருக்கும்.
*தேங்காயை துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து பின்னர் மிக்சி ஜாரில் தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.
*இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்சி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து, மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
*காய்கறிகள் வதங்கி போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியதாக பளிச்சென்று இருக்கும்.
– எம்.பவித்ரா, அவரப்பாக்கம்.
* கீரை, வெண்டைக்காய் வேக வைக்கும்போது பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமையான நிறம் மாறாமல் இருக்கும்.
* பொரியல் செய்யும் போது தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் தூவினால், தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.
* குடைமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உட்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியை தடவி, பஜ்ஜி போடலாம். ருசியாக இருக்கும்.
* சாம்பார் வைக்க துவரம் பருப்பு இல்லையென்றால் ஒரு கப் கடலை மாவை கரைத்து விட்டு அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
* பருப்பு உசிலி செய்ய ஊறவைத்த கடலைப்பருப்பை மிளகாய், உப்பு, பெருங்காயத்துடன் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து குக்கரில் வேகவைத்து விடவேண்டும். பின்பு அதை ஆற வைத்து மிக்ஸியில் ஒரு தடவை போட்டு சுற்றி எடுத்தால் உதிர் உதிராக உசிலி ரெடியாகிவிடும். வாழைப்பூ பருப்பு உசிலியோ பீன்ஸ் உசிலியோ இதுபோல் செய்தால் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும்.
*மோர் மீதமாகிவிட்டால் அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு போட்டுவிட்டால் விரைவில் புளிக்காமலும் வாடை வராமல் இருக்கும்.
*எலுமிச்சை சாதத்துக்கு தாளிக்கும் பொழுது ஒரு குடை மிளகாயை மெல்லிய நீள வில்லைகளாக அரிந்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் சாதத்தில் கலந்தால் சூப்பராக இருக்கும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
